×

மதுரை விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரிப்பு: சரக்கு கையாள்கையும் உயர்வு

 

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் கடந்த 2024ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2025ல் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதேபோல, சரக்கு கையாள்கையும் உயர்ந்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு உள்நாட்டு சேவையாகவும், துபாய், அபுதாபி, கொழும்பு ஆகியற்றிற்கு வெளிநாட்டு சேவையாகவும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 2024ல் 13.2 லட்சம் பயணிகளும், 2025ல் 14.3 லட்சம் பயணிகளும் மதுரை விமான நிலையம் வந்து சென்றனர்.

இது 2024ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2025ல் பயணிகள் வருகை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், உள்நாட்டு பயணிகள் வருகை மட்டும் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. சிங்கப்பூர், துபாய்க்கு அடிக்கடி விமானங்கள் ரத்து உள்ளிட்ட காரணங்களால் 2024ல் 2.3 லட்சமாக இருந்த பயணிகள் எண்ணிக்கை, 2025ம் ஆண்டில் 2.08 லட்சமாக குறைந்துள்ளது. கடந்தாண்டு சரக்கு கையாள்கையும் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இது குறித்து விமானப் பயணிகள் கூறுகையில், ‘கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்பாட்டுக்கு வந்தது.

ஆனால், இரவு நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுவதில்லை. எனவே, இந்திய விமான ஆணையம், பிறநாட்டு நகரங்களுடனான ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையத்தை சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் மதுரையில் இருந்து கோலாலம்பூர், சார்ஜா, கத்தார், ரியாத் ஆகிய நகரங்களுக்கு நேரடி சேவையை விமான நிறுவனங்கள் வழங்க வசதியாக இருக்கும். இதில், ஒன்றிய அமைச்சகம் தலையிட்டு மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்ற பிற நாட்டு நகரங்களுடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும்.

இதனால், வெளிநாட்டு விமான சேவை அதிகரிக்கும். இதன் மூலம் மதுரை மற்றும் தென்மாவட்டங்களின் தொழில் வளம் பெருகும். வர்த்தகமும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

Tags : Madurai Airport ,Avanyapura ,Chennai ,Bangalore ,Delhi ,Mumbai ,Hyderabad ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை...