×

நம்பியூரில் பயணிகள் நிழற்குடையில் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ என தவெக நிறத்தில் எழுதியதற்கு கண்டனம்: அதிமுகவினர் நள்ளிரவில் ஆர்ப்பாட்டம்

 

 

கோபி: கோபி அருகே உள்ள நம்பியூர் கோசனத்தில் பயணிகள் நிழற்குடையில், ‘கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ’ என தவெக வண்ணத்தில், பெயர் எழுதியதை கண்டித்து நம்பியூர் யூனியன் அலுவலகம் முன்பு அதிமுகவினர் நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கோபி செட்டிபாளையம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தார்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே கோசனத்தில் பேருந்து நிறுத்தத்தில் சில மாதங்களுக்கு முன் 8.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக பயணிகள் நிழற்குடை கட்டும் பணி தொடங்கியது. சில நாட்களுக்கு முன் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் நிழற்குடையில் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ என தவெக வண்ணத்தில் எழுதப்பட்டது. இந்நிலையில் நிழற்குடையில் தவெக வண்ணத்தில் கே.ஏ.செங்கோட்டையன் பெயரும் எம்எல்ஏ என்ற பதவி பெயரும் எழுதப்பட்டதை கண்டித்து நேற்று நள்ளிரவில் அதிமுகவினர் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏவாக இல்லாத நிலையில், தவெக வண்ணத்தில் அவரது பெயர் எழுதப்பட்டு இருப்பது, தவெகவில் எம்எல்ஏவாக இருந்தபோது கட்டப்பட்ட நிழற்குடை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் எம்எல்ஏவாக இல்லாத நிலையில், நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவின் அடிப்படையிலேயே தவெக வண்ணத்தில் எழுதப்பட்டு உள்ளதாக கூறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை அழிக்காவிட்டால், அதிமுகவினர் திரண்டு பெயர் அழிக்கும் போராட்டத்தில் இன்று ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : K. ,Nambiur ,A. Sengkottayan ,Kobe ,Nambiur Gosana ,Nambiur Union Office ,Sengkottaian ,
× RELATED குன்னூரில் இன்று அதிகாலை கோயில்...