×

‘தமிழ்நாட்டை பல வகையில் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது’- முரட்டு அடிமையாக இருக்கிறார் எடப்பாடி: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

 

தஞ்சை: நிதி, கல்வி உரிமைகள் பறிப்பு, பட்ஜெட்டிலும் ஒன்றும் இல்லை என தமிழ்நாட்டை பல வகையில் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி பேசினார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தஞ்சை மகாராஜா மஹாலில் நடைபெற்ற முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் சகோதரர் எஸ்.எஸ்.ராஜகுமாரன்-சர்மிளா ஆகியோரின் மகள் ஐஸ்வர்யா-டாக்டர் வெங்கடேஷ் திருமணத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது: தஞ்சை மாவட்டம் எப்படி திராவிட இயக்கத்திற்கு செல்வாக்கான மாவட்டமோ, அதேபோல கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் செல்வாக்கான மாவட்டம் தான். அப்படிப்பட்ட திராவிட இயக்க குடும்பமும், கம்யூனிஸ்ட் இயக்கக் குடும்பமும் இணைகிற விழாவாக, இந்தத் திருமணம் இங்கே நடைபெற்றிருக்கிறது. ​இந்த அரங்கத்தின் பெயர் மகாராஜா. ஆனா மகாராஜாக்களுக்கு இணையாக மகாராணிகள் நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். முதல்வர் மகளிருக்கான திட்டங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். முதல்வராக பொறுப்பேற்றதும் அவர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான கையெழுத்து.

மகளிருக்கான ‘விடியல் பயணத் திட்டம்’. ​அதேபோல் ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்,’ புதுமைப் பெண் திட்டம், ஒரு கோடியே 30 லட்சம் மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இப்படி பல்வேறு சிறப்பான திட்டங்களை செய்து வருவதால்தான் இன்று தமிழ்நாடு இந்தியாவிலேயே வளரும் மாநிலங்களில் 11.19 சதவீத வளர்ச்சியோடு முதல் மாநிலமாக திகழ்கிறது. இதையெல்லாம் பொறுக்க முடியாத ஒன்றிய பாசிச பாஜக அரசு இன்றைக்குப் பல்வேறு வகையில் நம்முடைய தமிழ்நாட்டுக்கு, நம்முடைய அரசுக்குத் தொல்லைகளைக் கொடுத்து வருகிறது. நிதி உரிமையை பறிக்கிறார்கள். மொழி உரிமையை பறிக்கிறார்கள். இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள்.

கடந்த 1ம் தேதி அறிவித்த ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் இல்லை. ஆனால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னை தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்கன்னு பெருமையாக சொல்லிக்கொள்வார். இப்படி ஒன்றிய அரசு தமிழ்நாட்டை பல வகையில் வஞ்சித்து வருகிறது.
இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய ஒரு எதிர்கட்சித் தலைவர் இருக்கிறார். அவர் எடப்பாடி பழனிசாமி. நிதி அமைச்சர் பட்ஜெட்டைப் படித்து முடிக்கும் முன்பே ‘மிகச் சிறந்த பட்ஜெட்’ என்று சொல்கிறார். முரட்டு பக்தர்களை கேள்விப்பட்டிருப்பீங்க. முரட்டு அடிமைகளைப் பார்த்திருக்கிறீர்களா. பாஜகவுடைய முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படி எத்தனை அடிமைகள் வந்தாலும் சரி, பழைய அடிமைகள், புதிய அடிமைகள் வந்தாலும் சரி, நிச்சயம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெற்று நம்முடைய தலைவர் மீண்டும் முதலமைச்சராக அமரப்போவது உறுதி. ​இவ்வாறு உதயநிதி பேசினார்.

Tags : Tamil Nadu ,EU government ,Edappadi ,Deputy Chief ,Udayanidhi ,Deputy ,Deputy Prime Minister ,Udayaniti Stalin ,Thanjai Maharaja ,
× RELATED அதிமுகவைப் போல நாங்களும் விரைவில்...