×

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அதிமுக பிரமுகருக்கு 7 ஆண்டு சிறை மகளிர் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

விழுப்புரம், பிப். 2:   கள்ளக்குறிச்சி அருகே கட்சியில் எம்எல்ஏ சீட்டு கேட்க, மனைவியிடம் வரதட்சணை கொடுமை செய்ததால், மனவேதனையடைந்த அதிமுக பெண் நிர்வாகி தற்கொலை செய்துகொண்டார். இவ்வழக்கில், கணவருக்கு 7 ஆண்டு சிறைதண்டனை விதித்து, மகளிர் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மூங்கில் பாடியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி(36). அதிமுக பிரமுகர். இவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தவெளியை சேர்ந்த தனலட்சுமி(28) என்பவருக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனலட்சுமி அதிமுகவில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணை செயலாளராக இருந்து துள்ளார். இதனிடையே கடந்த 2011ம் ஆண்டில் தனது மனைவி மற்றும் தனது பெயரில் கட்சியில், எம்எல்ஏ சீட்டுக்காக பணம் கட்ட வேண்டும் என்று மனைவி தனலட்சுமியிடம் ரூ.20 லட்சம் வரதட்சணையாக பணம் கேட்டு மிரட்டியுள்ளார் சூரியமூர்த்தி. மாமியார் வீட்டில் சென்று இந்த பணத்தை வாங்கித் தருமாறு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கார் வாங்க மேலும் ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் வரதட்சணை கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் பொறுத்துப் பார்த்த தனலட்சுமி மனவேதனை அடைந்து, கடந்த 2011 மார்ச் 27ம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது சகோதரர் இளையராஜா அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியமூர்த்தியை கைது செய்தனர்.  இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சாந்தி தீர்ப்பு கூறினார். அதில் அதிமுக பிரமுகர் சூரியமூர்த்திக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு சிறப்புவழக்கறிஞர் ராதிகாசெந்தில் ஆஜரானார்.

Tags : AIADMK ,jail ,suicide ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...