திருவண்ணாமலை: ஆரணி அருகே கரும்பு லோடு டிராக்டர் உரசியதில் மின் கம்பம் உடைந்து விழுந்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூரில் இருந்து கரும்பு லோடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் நேற்றிரவு ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தது. சேவூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது டிராக்டரில் இருந்த கரும்புகள், சாலையின் நடுவே உள்ள மின்கம்பதில் உரசியுள்ளது. இதில் மின்கம்பம் உடைந்து சாலையின் நடுவே விழுந்தது. மின் கம்பிகள் அறுந்து தொங்கியது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சாலையின் நடுவே மின்கம்பம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் ஆரணி மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து சாலையில் கிடந்த மின்கம்பம் அகற்றப்பட்டது. இதைதொடர்ந்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
