புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் சிலிகுரி பாதை இந்தியாவின் பிரதான பகுதியையும் வட கிழக்கு மாநிலங்களையும் இணைக்கிறது. இது 22 கி.மீ. அகலம் கொண்ட 60 கி.மீ. தொலைவுடைய மிக குறுகிய பாதையாகும். இதன் இரு புறமும் நேபாள, வங்கதேச எல்லைகள் அமைந்துள்ளன. வடபகுதியில் பூடான் எல்லை உள்ளது. சீனா மற்றும் வங்க தேசத்தால் சிலிகுரி பாதைக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நீடிக்கிறது. இதை எதிர்கொள்ள அங்கு பூமிக்கு அடியில் ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி வாயிலாக நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘வடகிழக்கு மாநிலங்களையும் இந்தியாவின் பிரதான பகுதியையும் இணைக்கும் வகையில் சிலிகுரி பாதையில் 40 கி.மீ. தொலைவுக்கு பூமிக்கடியில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இது பாதுகாப்பு ரீதியாக மிகவும் முக்கியமான திட்டமாகும். மேலும் தற்போது இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் தடத்தை, 4 வழித்தடமாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது’ என்றார்.
