இம்பால்: மணிப்பூர் மாநில பாஜக சட்டமன்ற கட்சித் தலைவராக யும்நம் ஹேம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மெய்பீஸ் மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே இன வன்முறை தொடங்கியது. இந்த வன்முறையின் போது குறைந்தது 260 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். பல மாதங்களாக வன்முறை நீடித்து வந்ததால் 2025 பிப்.9 அன்று பா.ஜ முதல்வர் பிரேன்சிங் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து 2027ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள மணிப்பூர் சட்டப்பேரவை முடக்கி வைக்கப்பட்டது. அங்கு 2025 பிப்.13 அன்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமான அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. உள்துறை செயலாளராக இருந்த அஜய்குமார் பல்லா தற்போது மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார். இருப்பினும் அங்கு தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது. இருப்பினும் மணிப்பூரில் மீண்டும் பா.ஜ அரசு அமைக்க வேண்டும் என்று அந்த கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்தனர். 2022ல் மணிப்பூரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 32 பாஜ எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்களும் பா.ஜவில் இணைந்ததால் தற்போது சட்டப்பேரவையில் பா.ஜ பலம் 37ஆக உள்ளது. இதில் சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி சென்றனர். அங்கு மீண்டும் ஆட்சி அமைக்க ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ய பா.ஜ நிர்வாகிகளை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதில் முன்னாள் முதல்வர் பிரேன் சிங், சட்டப்பேரவை சபாநாயகர் சத்யபிரதா சிங், முன்னாள் அமைச்சர் ஒய். கேம்சாந்த் சிங் ஆகியோர் அடங்குவர். பாஜ மணிப்பூர் மாநிலத் தலைவர் ஏ. ஷாரதா தேவியும் டெல்லியில் நடந்த ஆலோசனையில் கலந்து கொண்டார்.
தற்போது அமலில் உள்ள ஜனாதிபதி ஆட்சி அடுத்த வாரம் முடிவடைய உள்ள நிலையில், அங்கு புதிய அரசு அமைப்பது குறித்து பா.ஜ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மீண்டும் புதிய ஆட்சி அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் மணிப்பூர் பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்; மணிப்பூர் மாநில பாஜக சட்டமன்ற கட்சித் தலைவராக யும்நம் ஹேம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
