×

தென்பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரத்தில் ஒரு மாதத்தில் நடுவர்மன்றம் அமைக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உத்தரவு; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: தென்பெண்ணையாறு என்பது கர்நாடக மாநிலம், சிக்கபள்ளாபூர் மாவட்டம், நந்தி மலையில் உருவாகிறது. இது கர்நாடகாவில் தொடங்கி தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. இந்த தென் பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியில் கர்நாடகா அரசு தடுப்பணை கட்டியது. இது தான் பெரும் சர்ச்சையாகிய நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2020ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

அதில்,\” தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இருமாநில பிரச்சனையை தீர்க்கும் விதமாக புதியதாக நடுவர் மன்றத்தை உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக ஒன்றிய அரசிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றத்தை அமைக்க ஒன்றிய அரசுக்கு காலக்கெடு விதித்து இருந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசால் உடன்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் எந்தவித தீர்வும் எட்டப்படாமல் இழுபறியான நிலை நீடித்து வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் , வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த டிசம்பர் 19ம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், ‘‘ இந்த நீர் பங்கீட்டு விவகாரத்தில், தனி நடுவர் மன்றத்தை அமைக்காமல் இருப்பதற்கான எந்த ஒரு காரணத்தையும் உச்ச நீதிமன்றத்தால் காண முடியவில்லை. தென்பெண்ணையாறு விவகாரத்தில் நீர் பங்கீட்டு பிரச்சனையை தீர்க்கும் விதமாக தனி நடுவர மன்றத்தை ஒரு மாதத்தில் ஒன்றிய அரசு அமைக்க வேண்டும். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் ’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Thenpennai River ,Supreme Court ,New Delhi ,Nandi Hills, ,Chikkaballapur district, Karnataka ,Karnataka ,Krishnagiri ,Dharmapuri ,Tiruvannamalai ,Villupuram ,Cuddalore ,Tamil Nadu ,Markandeya River ,Thenpennai River… ,
× RELATED 16 முறை தீர்மானம் நிறைவேற்றியும்...