திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இந்த வருட பொங்கல் திருவிழா பிப்ரவரி 23ம் தேதி அம்மனை காப்பு கட்டி குடியிருத்தும் சடங்குடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர். உலக பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு நேற்று நடைபெற்றது. நேற்று முன்தினம் தரிசனத்திற்கு பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்ததால் நேற்று அதிகாலை 1 மணிக்குத் தான் நடை சாத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம், தீபாராதனை, உஷபூஜை, பந்தீரடி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 9.45 மணிக்கு கோயில் முன் வைக்கப்பட்டிருந்த அடுப்பில் ஆற்றுகால் கோயில் மேல்சாந்தி தலைமையில் தீ மூட்டப்பட்டது. அதன் பிறகு கோயில் மணி அடிக்கப்பட்டது.
பின்னர் கோயிலின் சுமார் 10 கிமீக்கும் அதிகமான சுற்றளவில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பெண்கள் தங்களது அடுப்புகளில் தீ மூட்டி பொங்கலிடத் தொடங்கினர். கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கரின் மனைவி அனகா ஆர்லேக்கர் கவர்னர் மாளிகை முன் பொங்கலிட்டார், ஒன்றிய அமைச்சர் சோபா கரந்தலாஜெ, அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் தீபா தாஸ் முன்ஷி, முன்னாள் முதல்வர் கருணாகரன் மகள் பத்மஜா வேணுகோபால், ஒன்றிய அமைச்சர் சுரேஷ்கோபி மனைவி ராதிகா, நடிகைகள் சிப்பி, ஆனி, அனு, தேவி சந்தனா உட்பட பலர் கலந்துகொண்டு பொங்கலிட்டனர். மதியம் 2.15 மணியளவில் பொங்கல் நிவேத்யம் நடைபெற்றது. இதற்காக 350 புரோகிதர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பொங்கல் பானைகளில் புனித நீர் தெளித்தனர். அதன்பிறகு தங்களது வேண்டுதல்களை ஆற்றுகால் தேவி நிறைவேற்றுவாள் என்ற நம்பிக்கையுடன் பெண்கள் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
நேற்று சந்திர கிரகணம் என்பதால் பிற்பகல் 3.10 மணி முதல் இரவு 7 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து இரவு ஆற்றுகால் தேவி வீதி உலா நடைபெற்றது. இன்று (4ம் தேதி) நள்ளிரவு 12.45 மணியளவில் நடைபெறும் குருதி தர்ப்பணத்துடன் இந்த வருட பொங்கல் திருவிழா நிறைவடையும். பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று திருவனந்தபுரம் நகரத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வசதிக்காக நாகர்கோவில்- திருவனந்தபுரம்-கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு 100க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குமரி மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் பொங்கலிடுவதற்காக வந்திருந்தனர்.
