×

காத்துக் கிடப்பவர்கள் இலவு காத்த கிளியாக மாறுவார்கள் தமிழ்நாட்டில் ஸ்டாலின் அலைதான்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

சென்னை: வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஸ்டாலின் அலைதான் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று ஆய்வு செய்தார். அதன்படி, கொளத்தூர் அகரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உள்ளங்கை நெல்லிக்கனி போல் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி நாயகன் சாதனைகள் நாள்தோறும் வளர்ந்த வண்ணம் உள்ளது. மக்களுடைய பேராதரவு திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டு உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை பல்வேறு தேர்தலில் பல்வேறு அலைகளை பார்த்திருப்பீர்கள்.

இந்த தேர்தல் ஸ்டாலின் அலையாக தான் தமிழகத்தில் இருக்கும். மஞ்சள் காமாலை நோய் வந்தவர்களுக்கு கண்ணில் பட்டதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். கெஞ்சுவதும் கெஞ்சுவதும் யாதொன்றும் இல்லை அஞ்சுவதும் அஞ்சத் தேவையும் இனி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்போதும் இல்லை. மக்களோடு நாங்கள் எப்போதும் இருக்கிறோம். திராவிட முன்னேற்ற கழகத்துடன் தோழமையுடன் இருக்கும் கட்சிகளை அரவணைக்கும் அன்புக்கரங்களாக தமிழக முதலமைச்சர் இருக்கிறார். எதிர்பார்த்து காத்துக் கிடப்பவர்கள் இலவு காத்த கிளியாக மாறுவார்கள்.

எங்காவது ஓரிரு சம்பவங்கள் எதிர்பாராமல் நடக்கும் அசம்பாவிதங்கள் சொந்த பிரச்னைகள் சொந்த காரணங்களுக்காக நடக்கும் அசம்பாவிதங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் தான் குற்றச்சாட்டாக இருக்கும். வருமுன் தடுப்பது ஒன்று வந்த பிறகு அதற்கான நடவடிக்கை எடுப்பது மற்றொன்று. இரண்டையும் ஒரு சேர ஒரு தராசு போல் பாவிக்கும் அரசு தமிழக முதல்வர் அரசு. எந்தப் பகுதியிலும் எந்த மக்களும் துன்புறுத்தலுக்கு ஆளாக கூடாது என்பதற்காகத்தான் இனத்தால், மொழியால், மதத்தால் மக்களை பிளவுபடுத்தும் பாஜ தமிழகத்தில் காலூன்றாத அளவிற்கு அதிதீவிர நடவடிக்கையை உறுதியோடு தமிழக முதலமைச்சர் எடுத்துக்கொண்டு வருகிறார். அனைத்து மக்களையும் காப்பார். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கொளத்தூர் 70 அடி சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய காவல் ஆணையர் அலுவலகம், பெரவள்ளூர் காவல் நிலையம், கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ராஜா தோட்டம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் அருகில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் ராஜா தோட்டம் பல்நோக்கு மையம், கொளத்தூர் ரெட்டேரி சாலை சந்திப்பு அருகில் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரிக்கரை பூங்கா உள்ளிட்ட பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

Tags : Stalin wave ,Tamil ,Nadu ,Minister ,P.K. Sekarbabu ,Chennai ,Tamil Nadu ,Chennai Metropolitan Development Corporation ,
× RELATED போராட்டம் நடத்த தற்காலிக ஊழியர்களை...