சென்னை: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் மருதமலையில் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் மருதமலை வனப் பகுதியில் 110 கோடி ரூபாய் செலவில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, முருகன் சிலை அமையவுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்த வழக்கறிஞர்கள் குழுவின் அறிக்கை அறநிலையத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை படித்துப்பார்த்த நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 137 மீட்டர் தூரத்தில் தான் சிலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானத்தை அனுமதி முடியாது. முருகன் சிலை நிறுவினால் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தனர்.
அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முருகன் சிலைக்கு பூஜைகள் நடத்தப்படாது. சிலையை வலம் வந்து தரிசிக்க மட்டுமே அனுமதிப்படும். 137 மீட்டர் இடத்துக்கு பதிலாக 437 மீட்டர் தொலைவில் மாற்று இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றார்.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வேறு இடத்தை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
