- முதல் அமைச்சர்
- காந்தி
- சென்னை
- மகாத்மா காந்தி
- எழும்பூர் அரசு அருங்காட்சியகம்
- மு.கே ஸ்டாலின்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- அமைச்சர்கள்
- எம் சுப்பிரமணியன்
- பி.கே.சேகர்பாபு
- தலைமை…
சென்னை: மகாத்மா காந்தியின் 79வது நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நேற்று காலை 11 மணிக்கு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் முருகானந்தம், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போலீசார் இசைக்கருவிகள் வாசித்து அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, அனைவரும் 2 நிமிடம் மவுனஅஞ்சலி கடைபிடித்தனர். இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீண்டாமை உறுதிமொழி படிக்க படிக்க அங்கு இருந்த அனைவரும் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முதல்வர் படித்த உறுதிமொழி விவரம்: இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன் / குடிமகள் ஆகிய நான் நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாக கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று இதனால், உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமூக வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும், இதனால் உளமாற உறுதி அளிக்கிறேன். இவ்வாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதையடுத்து, போலீசாரின் அணிவகுப்பு நிறைவுபெற்றதும், அனைவரும் கலைந்து சென்றனர்.
* கோட்சேவின் வாரிசுகளுக்கு பாடம் புகட்டி காந்தி மண்ணை காத்திடுவோம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: தியாகிகள் தினம்: மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம். அமைதி வழியின் வலிமையை உலகுக்குக் காட்டி, ஒற்றுமையுணர்வு தழைக்கப் பாடுபட்டதால், கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி, ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார். மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்கு தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
