நாகப்பட்டினம், ஜன. 30: புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் மதுபானம் கடத்தலை தடுக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது என எஸ்பி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று எஸ்.பி அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், திருட்டு, வழிபறி மற்றும் மதுபானங்கள் கடத்துவது போன்ற பல்வேறு பிரச்னைகளை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக கடல் வழியாக கஞ்சா கடத்துவதை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு செய்யப்படுகிறது. மேலும் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியிலிருந்து நாகப்பட்டினம் வழியாக தமிழகத்திற்குள் சாராயம், மதுபானங்கள் கடத்துவதை தடுக்க சிறப்பு படை அமைக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள், தொடர் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் மேலும் சில இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வருகிறது. இது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
