×

ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றம்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அடங்கிய அம்மையார்குப்பம் முதல் ஆந்திர மாநிலம், ஆவளகுண்டா வரையிலான மாநில நெடுஞ்சாலை வழியாக பாலாபுரம், ஸ்ரீ காளிகாபுரம், வீரமங்கலம் பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் திருத்தணி, ராணிப்பேட்டை, பெங்களூர், ஆந்திர மாநிலம் சித்தூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் இச்சாலையில் எப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இச்சாலையோரமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கோயிலால் இத்தகைய போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. எனவே, சாலை ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலை இடித்து அகற்றி, வாகன போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் இச்சாலையில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் தொடர்பாக வருவாய்துறையினர் உதவியுடன் மாநில நெடுஞ்சாலை துறையினர் நில அளவீடு செய்தனர். பின்னர், அப்பகுதி சாலையில் அங்கன்வாடி, சமுதாய நலக்கூடம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதி, கோயில் மற்றும் கடைகள், வீடுகளின் முகப்புகள் போன்றவை சாலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்து அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதை ஏற்று, ஒருசிலர் தானாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். கடந்த சில மாதம் மீதமிருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். இந்நிலையில், அப்பகுதியில் சாலை ஆக்கிரமிப்பில் இருந்த செல்வ விநாயகர் கோயில் கட்டிடத்தை, அப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி, இன்று காலை ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் சரஸ்வதி, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சிற்றரசு, உதவி கோட்ட பொறியாளர் நரசிம்மன், ஆர்.கே.பேட்டை காவல்நிலைய எஸ்ஐ ராக்கிகுமாரி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியாளர்கள் முன்னிலையில், ஜேசிபி இயந்திரம் மூலமாக இடித்து அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Tags : R. ,Ammayarkuppa ,R. K. ,Balapuram ,Sri Kaligapuram ,Veeramangalam ,Tirudani ,Ranipetta ,Bangalore ,Andhra Pradesh Chittoor ,Highway ,Ammayarkupam ,Andhra State ,Awalkunda ,Andhra Pradesh ,Uttar Pradesh ,
× RELATED ஊட்டியில் ரேஸ் கிளப்பிடம் இருந்து...