டெல்லி : நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் சுமார் 15% பங்களிப்பை கொண்டு தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. குஜராத் (13%), மகாராஷ்டிரா (13%), உ.பி. (8%), கர்நாடகா (6%) உள்ளிட்ட 7 மாநிலங்கள் உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் சுமார் 60%| பங்களிப்பை கொண்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் உரையுடன் நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது.
வரும் பிப். 1ம் தேதி 2026-27ம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, 2026ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சபையில் முறைப்படி தாக்கல் செய்தார். இந்த ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொருளாதார ஆய்வறிக்கையில் ரூபாயின் மதிப்பு கடந்த 2025ம் ஆண்டில் மோசமாக செயல்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதில், “சேவைகள் மற்றும் வெளிநாட்டுப் பணவரவு (Remittances) மூலம் கிடைக்கும் உபரி வருவாய், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையைச் சரிசெய்யப் போதுமானதாக இல்லை.ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த இந்தியா வெளிநாட்டு முதலீடுகளையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்த முதலீடுகள் குறைந்தால், ரூபாயின் நிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது.நாட்டின் வலுவான பொருளாதார அடிப்படைகளுடன் ஒப்பிடும்போது, ரூபாயின் தற்போதைய மதிப்பு அதன் உண்மையான திறனைப் பிரதிபலிக்கவில்லை,”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
