டெல்லி : சாதியப் பாகுபாடுகளைக் களைய யு.ஜி.சி. கொண்டு வந்த புதிய விதிகளுக்கு உயர் சாதி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் ரோஹித் வெமுலா மற்றும் பயல் தட்வி ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து, அவர்களது தாய்மார்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2012ம் ஆண்டின் பழைய விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான 2026-ம் ஆண்டின் புதிய விதிமுறைகளை யுஜிசி கடந்த 13ம் தேதி வெளியிட்டது.
யுஜிசியின் புதிய வழிமுறைகளுக்கு உயர்சாதி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து இந்த யுஜிசி விதிமுறைகளுக்கு தடை விதிக்கக்கோரி முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த அமைப்புகள் சார்பில்உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சாதி ரீதியான பாகுபாட்டுக்கு ஒரு முழுமையற்ற வரையறையை தந்துள்ளதாகவும் இதன் மூலம் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய நிறுவன ரீதியான பாதுகாப்பை இது மறுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், யுஜிசியின் புதிய விதிமுறைகளின் நோக்கம் என்ன? அதற்கான பலன் என்ன? என்பதை பார்க்க வேண்டும் என்றும் புதிய விதிமுறைகள் தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்து இருப்பதாகவும் கூறி யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்தனர். அதே சமயம் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பு வழங்க 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிமுறையை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், நிபுணர்களைக் கொண்டு புதிய விதிமுறைகளை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்த யுஜிசிக்கும் ஒன்றிய அரசுக்கும் உத்தரவிட்டது.
