×

கவலை நீக்கும் கலம்பா தேவி

ஆதிசக்திக்கு உதவி புரியும் பல தேவிகளை யோகினிகள் என்று அழைக்கிறோம். அவர்களில் ஒரு முக்கியமான யோகினியாகக் கருதப்படுபவர் கலம்பா யோகினி.பல யோகினிகளின் வழிபாடும், பழங்குடியினரின் வழிபாடும் ஒற்றுப்போவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதாவது, தந்திர சாஸ்திரங்கள் கூறும் யோகினிகளை, பழங்குடியினர் தங்கள் புரிதலுக்கு ஏற்றவாறு வழிபடுகிறார்கள் என்று நாம் கருதினால் அது தவறில்லை என்று தான் தோன்றுகிறது.அந்த வகையில் இந்த யோகினியின் பெயர் ‘‘கடம்பா” என்ற பழங்குடியினரின் சொல்லில் இருந்து வந்திருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

கடம்பா தேவியும் சியாமளா தேவியும்

கடம்பம் என்ற வார்த்தை, கடம்ப மரத்தை குறிப்பதாக கொள்ளலாம். அந்த வகையில் நாம் பார்க்கும் போது, கடம்ப வன வாசினி என்று அம்பிகையை நாம் அழைப்பதையும் கவனிக்க வேண்டும். அதாவது, கடம்ப மரங்கள் அதிகமாக அடர்த்தியாக வளர்ந்திருக்கும் காட்டில் அம்பிகை வசிப்பதால், அவளுக்கு இந்த திருநாமம் வந்தது. அதேபோல கடம்ப மலரும், கடம்ப மரங்களும் முருகப் பெருமானோடும் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. அதனால்தான் நாம் முருகப் பெருமானை, ‘‘கடம்பன்” என்று அழைக்கிறோம். முருகப் பெருமான் கடம்ப மலர் மாலைகளை விரும்பி சூடுவதால் அவருக்கு இந்த நாமம் வந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தல விருட்சமாக இருப்பதும் கடம்ப மரம்தான். ஒரு காலத்தில் மதுரையே கடம்ப மரக்காடாக இருந்ததாக புராணங்கள் சொல்கிறது. அம்பிகைக்கு இருக்கும் பல வடிவங்களில் முக்கியமான மாதங்கி தேவி, கடம்ப மரக் காட்டில் வசிப்பதாகத்தான் சொல்லப்படுகிறது. இதை சியாமளா தண்டகத்தில் காளிதாசர் பல இடங்களில் சொல்கிறார்.இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது, சியாமளா தேவியின் ஒரு அம்சத்தையே, கலம்பா தேவி அல்லது கடம்பா தேவியாக வழிபடுகிறோமோ என்று தோன்றுகிறது.

இந்த யோகினியை எங்கே பார்க்கலாம்?

864 CEயில் ஒரிசாவை ஆண்டுவந்த, சாந்திகரதேவனின் பட்டத்து அரசியான ஹிராதேவி, உலகின் முதல் அறுபத்தி நான்கு யோகினிகளின் கோயிலை கட்டினாள். அந்த கோயில் இருக்கும் ஊர், அந்த ராணியின் பெயரிலேயே, ஹீராப்பூர் என்று அழைக்கப் படுகிறது. இது ஒரிசா மாநிலத்தில் உள்ளது. இந்தக் கோயிலை, கோலாபதன் என்ற மிலேச்சன் படை எடுத்து வந்து சேதப்படுத்தினான். அவன் சேதப்படுத்தியது போக எஞ்சிய கோயிலை இன்றும் ஒரிசாவில் காணலாம். அந்தக் கோயிலில் இந்த யோகினியின் திரு உருவம் இருக்கிறது.

கலம்பா யோகினியின் தோற்றமும் அதில் இருக்கும் மர்மங்களும்…

கலம்பா யோகினி ஒரு காட்டுப்பன்றியின் மீது இருப்பவளாகவும், கையில் வில்லை எந்தியவளாகவும் காட்சி தருகிறாள்.காட்டுப் பன்றி என்பது அதிக சக்தி வாய்ந்தது. சமயத்தில் சிங்கத்தையும் புலியையுமே எதிர்க்க வல்லது. பூமியில் ஆழப் புதைந்திருக்கும் கிழங்கு வகைகளை அகழ்ந்து எடுத்து உண்ண வல்லது. அதைபோலவே நமது மனம் என்னும் பூமியில் ஆழப் புதைந்திருக்கும் ஆணவம் என்னும் தலைகனத்தை அகழ்ந்து எடுப்பவள் இந்த யோகினி என்பதால், இவள் பன்றி வாகனத்தில் காட்சி தருகிறாள்.

பிறவிக் கடலில் வீழ்ந்து, மூழ்கி தத்தளிக்கிறோம் நாம். வராஹப் பெருமான் எப்படி பூமி தேவியை பிரளய நீரில் இருந்து எடுத்தாரோ, அதே போல, பிறவிக்கடலில் இருந்து நாம் வெளிவருவதற்கு, தக்க யோக சாதனைகள் செய்ய இந்த தேவி உதவுகிறாள்.

இரண்டு கைகளும் ஆயுதங்களும்

இந்த யோகினிக்கு இரண்டே இரண்டு கைகள்தான் இருக்கின்றன. பூலோகத்தில் தர்மமான இன்பங்களையும், சுவர்க்க இன்பத்தையும் சாதகன் அடைவதற்கு இந்த யோகினி உதவுகிறாள் என்பதை இது காட்டுகிறது.அதேசமயம் இந்த யோகினியின் கையில், ஒரு வில் இருக்கிறது. ஆனால் வில்லில் அம்பு இல்லை. வில்லன் நாணை தனது செவி வரை இழுத்து பிடிப்பது போல இந்த யோகினி காட்சி தருகிறாள்.இந்த யோகினியின் கையில் இருக்கும் வில்லானது சாதகனின் மனதை குறிக்கிறது. காது வரை இழுத்த வில்லன் நாண், குருவின் வாக்கில் இருந்து உபதேசமாக காதின் வழியே கேட்ட மந்திரத்தை குறிக்கிறது.

குருவின் வாக்கில் இருந்து உபதேசமாக கேட்ட மந்திரத்தை, ஒரு நிலைப்பட்ட மனதோடு மனனம் செய்யச் செய்ய சாதகன் முன்னேறுவான் என்பதை இது காட்டுகிறது. வில்லின் நாண் நன்றாக இழுக்கப்பட்டால் தான் வில் நன்றாக வளைந்து அதில் பூட்டப் பட்ட அம்பு இலக்கை நோக்கி செல்லும். அதைப்போல, மனம் என்னும் .வில்லில் மந்திரம் என்பது உரு ஏற ஏற தான், மனிதனின் ஆன்மா உயர் நிலையை அடையும். இதையே இந்த யோகினி உணர்த்துகிறாள்.

இந்த யோகினியின் கையில் ஏன் அம்புகள் இல்லை

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு தனது குறிக்கோளைத் தவறாமல் அடைவதற்கு வில் உதவுவதுபோல இந்த யோகினி தன்னை வழிபடும் சாதகருக்கு அவர்களால் குறிக்கோளை அடைய உதவுகிறாள் என்று கௌலஞான நிர்ணயா என்ற தந்திர நூல் நமக்கு சொல்கிறது.வில்லையும் அம்பையும், குறிக்கோளுக்கும், வெற்றிகரமான செயலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக சொல்வதை நாம் இன்றும் கவனிக்கலாம்.வில் எந்த அளவுக்கு வளைகிறதோ அந்த அளவிற்கு அம்பு விசையோடு நீண்ட தொலைவு பாய்ந்து சென்று இரையைத் தாக்கும். இங்கே அம்பு எனப்படுவது நமது மனம், அதுவே உடலைக் கட்டுப்படுத்தி இயக்குகிறது.

இந்த யோகினி வழிபாட்டில் நமது உடலாகிய வில், சாதனைகளைப் பழகுவதற்கு உதவி செய்வதோடு, மனமாகிய அம்பை பிரபஞ்சத்திற்கு அப்பால் கொண்டு செல்ல உதவுகிறது. உடலும் மனமும் இசைவோடு இருக்குமானால் செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்க முடியும் அல்லவா?

ஆனால், இந்த யோகினியின் கையில் இருக்கும் வில்லில், அம்பு பூட்டப்படவில்லை. யோக சாதனை செய்பவர்களின் மனமே அம்பாகும் என்பதை இது மறைமுகமாகத் தெரிவிக்கிறது.
மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் முதலில் நாம் உடலைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக யோக சாதனைகள் செய்ய வேண்டும். மூச்சுக்காற்றை நெறிப்படுத்தி பிராணாயாமப் பயிற்சிகளை முறையாகச் செய்வதன் மூலமாக உடலாகிய வில்லை வளைத்து, மனமாகிய அம்பை அதில் எளிதாகப் பூட்டி, எய்ய வேண்டிய இலக்காகிய முக்தியை அடைய முடியும்.இப்படி யோகத்தை பயிலும் தனது உபாசகனுக்கு, யோகத்தில் முன்னேற இந்த தேவி உதவுகிறாள்.

ஜி.மகேஷ்

 

Tags : Kalamba Devi ,Adi Shakti ,Yoginis ,Kalamba ,
× RELATED விதுரர் சொன்னது என்ன?