சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரும், 2011 உலகக்கோப்பை நாயகனுமான யுவராஜ் சிங், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு கட்டத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் தனக்கு இருந்த ஆர்வம் மற்றும் மகிழ்ச்சி முழுமையாக வடிந்துவிட்டது. நான் விளையாட்டை ரசிப்பதை நிறுத்திவிட்டேன். எனக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை நான் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. மேலும் அப்போது அணியில் எனக்கு உரிய ஆதரவு கிடைக்கவில்லை என்று உணர்ந்தேன்.
அதேபோல் எனக்குப் போதிய மரியாதை இல்லை என்றும் தோன்றியது. மரியாதை மற்றும் ஆதரவு இல்லாத இடத்தில் நான் ஏன் இருக்க வேண்டும்? யாருக்காக, எதை நிரூபிப்பதற்காக நான் விளையாட வேண்டும்? என்ற எண்ணம் எழுந்தது. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நான் மிகவும் சோர்வடைந்திருந்தேன். அது எனக்கு மிகுந்த வலியைத் தந்தது. ஆனால், என்று நான் கிரிக்கெட்டை விட்டு விலகினேனோ, அன்றுதான் நான் மீண்டும் பழைய யுவராஜாக, நானாக உணர்ந்தேன். இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.
