×

ஆஸி ஓபன் டென்னிஸ் காலிறுதி; விறுவிறு திரில்லரில் விடியல் கண்ட எலனா: மற்றொரு போட்டியில் பெகுலா அமர்க்களம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா, கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் ரஷ்யாவில் பிறந்து கஜகஸ்தான் நாட்டுக்காக ஆடி வரும் எலனா ரைபாகினா (26), போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக் (24) மோதினர். இப்போட்டியில், 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று அனுபவம் வாய்ந்த வீராங்கனையான இகா, முதல் செட்டில் ஈடு கொடுத்து ஆடியபோதும், 2வது செட்டில் சொதப்பினார்.

அதனால், 7-5, 6-1 என்ற நேர் செட்களில் எலனா ரைபாகினா எளிதில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் அமெரிக்க வீராங்கனைகள் ஜெஸிகா பெகுலா (31), அமண்டா அனிசிமோவா (24) மோதினர். முதல் செட்டில் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய பெகுலா, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் இருவரும் சரிசமமாக மோதியதால் டைபிரேக்கர் வரை நீண்டது.

அந்த செட்டை 7-6 (7-1) என்ற புள்ளிக் கணக்கில் பெகுலா கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றிவாகை சூடிய அவர் அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இன்று நடக்கும் அரை இறுதிப் போட்டிகளில், அரீனா சபலென்கா-எலினா ஸ்விடோலினா, பெகுலா – எலனா ரைபாகினா மோதவுள்ளனர்.

* ஜோகோவிச், சின்னர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலியன் ஓபன் ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டி ஒன்றில் நேற்று, செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் (38), இத்தாலி இளம் வீரர் லொரென்ஸோ முசெட்டி (23) மோதினர். துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய முசெட்டி முதல் இரு செட்களை, 6-4, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். தொடர்ந்து நடந்த 3வது செட்டில், 3-1 என்ற புள்ளிக் கணக்கில் ஜோகோவிச் முன்னிலை வகித்தபோது, காயம் காரணமாக கெடுவாய்ப்பாக முசெட்டி வெளியேறினார்.

அதனால், வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட ஜோகோவிச், அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் பென் ஷெல்டன் மோதினர். இந்த போட்டியில் துவக்கம் முதல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர், 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடினார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

Tags : Aussie Open Tennis Quarterfinals ,Elena ,Pegula ,Melbourne ,Australian Open Grand Slam ,Jessica Pegula ,Elena Rybakina ,Melbourne, Australia… ,
× RELATED தாய்லாந்து பேட்மின்டன் முதல் சுற்று போட்டியில் கிரண், மிதுன் வெற்றி