- கிரண்
- மிதுன்
- தாய்லாந்து
- பாங்காக்
- கிரண் ஜார்ஜ்
- மிதுன் மஞ்சுநாத்
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்
- பேங்காக், தாய்லாந்து
பாங்காக்: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மின்டன் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, இந்திய வீரர்கள் கிரண் ஜார்ஜ், மிதுன் மஞ்சுநாத் அபார வெற்றி பெற்றனர். தாய்லாந்தின் பாங்காக் நகரில் தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், மலேசிய வீரர் அய்தில் ஸோலே பின் அலி சதிகின் மோதினர்.
துவக்கம் முதல் துள்ளலாய் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜார்ஜ், 21-15, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத், டென்மார்க் வீரர் மேக்னஸ் ஜோகனஸென் களமாடினர். முதல் செட்டில் சிறப்பாக ஆடிய மிதுன், 21-12 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார்.
2வது செட்டில் சுதாரித்து ஆடிய மேக்னஸ், 21-9 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். தொடர்ந்து நடந்த 3வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய மிதுன், அந்த செட்டை, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
நேற்று நடந்த மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் ஆடிய இந்திய வீரர்கள் சுப்ரமணியன், பிரியன்சு ரஜாவத், மன்ராஜ் சிங், தருண் மன்னெபள்ளி தோல்வியை தழுவி போட்டியில் இருந்து வெளியேறினர். மகளிர் ஒற்றையர் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் அன்மோல் கார்ப், ஸ்ரீயன்ஸி வலிஷெட்டி, இஷாராணி பருவா உள்ளிட்டோர் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
