×

சென்னை துறைமுக வளர்ச்சிக்காக ரூ.54.27 கோடியில் 4 புதிய திட்டங்கள்: ஒன்றிய செயலாளர் விஜய் குமார் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை துறைமுக வளர்ச்சிக்காக ரூ.54.27 கோடி மதிப்பில் 4 புதிய திட்டங்களை ஒன்றிய செயலாளர் விஜய் குமார் திறந்து வைத்தார். கடல்சார் அம்ரித் கால் விஷன்-2047 திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் செயலாளர் விஜய் குமார் கடந்த 27ம் தேதி சென்னை துறைமுக ஆணையத்தை பார்வையிட்டார். துறைமுகத்தின் செயல்பாடு மற்றும் நிதிநிலை, எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, துறைமுகத்தின் முக்கிய மைல்கல்லாக கருத்தப்படும் செயல்திறன் உயர்வு, பாதுகாப்பு, பயணிகள் வசதி மற்றும் கட்டமைப்பு அழகுபடுத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு ரூ.54.27 கோடியில் செயல்படுத்தப்படும் 4 முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதில், ரூ.29.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட அந்தமான் மற்றும் நிக்கோபார் பயணிகள் முனையம் முக்கியமானதாகும். இது அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு பயணிகள் போக்குவரத்தை மேலும் ஊக்குவித்து மற்றும் கடல் வழிப்பயணத்தை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.22.58 கோடி செலவில் உருவாக்கப்பட்ட உள்நாட்டு கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் துறைமுக எல்லைக்குள் மற்றும் அணுகல் கால்வாயில் கப்பல் இயக்கத்தை நேரடி கண்காணிப்பின் மூலம் ஒழுங்குபடுத்தி, விபத்துகளை தடுத்து, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இரவு நேரங்கள் மற்றும் மோசமான வானிலை சூழல்களில் கப்பல்கள் பாதுகாப்பாக துறைமுகத்தை அணுக உதவும் வகையில் ரூ.39 லட்சத்தில் கால்வாய் மிதவை, வழிநடத்தல் உதவிகள் திட்டமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தின் நுழைவு பகுதிகளை நவீனப்படுத்தி, போக்குவரத்து சீரமைப்பு மற்றும் துறைமுகத்தின் புதுப்பிக்கும் வகையில் ரூ.1.5 கோடியில் துறைமுக நுழைவாயில் எண்.2 மறுசீரமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து, சென்னை துறைமுகத்தின் மூத்த அதிகாரிகளுடன் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் செயலாளர் விஜய் குமார் விரிவான ஆலோசனைகளை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், துறைமுகத்தின் மொத்த சரக்கு கையாளுதல் திறன், நிதி நிலை, செயல்பாட்டு செலவுகள் குறைப்பு, வளங்களின் சிறந்த பயன்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடல்சார் இந்தியா விஷன் 2030 மற்றும் கடல்சார் அம்ரித் கால் விஷன்-2047 திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள், முன்மொழியப்பட்ட கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை துறைமுகத்தின் மாஸ்டர் பிளான் திட்டத்தை விரைவாகவும் திட்டமிட்ட காலக்கெட்டுக்குள் செயல்படுத்தி, கிழக்கு கரையில் சென்னை துறைமுகத்தை முக்கிய கடல்சார் நுழைவாயிலாக மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

மேலும், துறைமுக வளாகத்தில் உள்ள க்ரூயிஸ் முனையம், அவுட்டர் ஹார்பர் திட்ட தளம் உள்ளிட்ட முக்கிய செயல்பாட்டு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளின் தரம், வேகம் மற்றும் திட்ட நிறைவேற்றத்தில் உள்ள சவால்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் ஒன்றிய அரசின் சமீபத்திய கடல்சார் கொள்கைகள், துறைமுகத் துறை சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்கால கண்ணோட்டம், தொழில் தொடங்குவதற்கான நடைமுறை, சிக்கல்கள், வாடிக்கையாளர் சேவை மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களில் அரசிடம் பங்குதாரர்கள் எதிர்பார்க்கும் தேவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai Port ,Union Secretary ,Vijay Kumar ,Chennai ,Union Government ,
× RELATED தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு