×

மாநில கட்சிகளை உடைக்கும் பாஜ சிவசேனாவை செய்தது போல் அதிமுகவையும் சிதைத்து அழிக்கும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

தர்மபுரி: மாநில கட்சிகளை உடைக்கும் பாஜ, மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்தது போல், தமிழகத்தில் அதிமுகவையும் சிதைத்து அழிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார். தர்மபுரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பேரவை கூட்டம், சிஐடியூ அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது:

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இடம் பெற்று, மிகப்பெரிய கூட்டணியாக உருவாக உள்ளது. ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு நிதியை வழங்குவதில் பாரபட்சமாக செயல்படுகிறது. தமிழ்நாடு அரசுக்கு ரூ.9.5 லட்சம் கோடி கடன் இருந்தும், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. பாஜ பூச்சாண்டி அல்ல, மிகப்பெரிய பூதம். எந்த மாநிலத்தில் பாஜ நுழைகிறதோ, அங்கு மாநில கட்சிகளை உடைத்து சிதைக்கிறது.

அதற்காக சாம, தான, பேத, தண்டம் என எல்லா காரியங்களையும் செய்கிறது. மகாராஷ்டிராவில் பெரிய கட்சியான சிவசேனாவுடன் கூட்டு சேர்ந்து, அக்கட்சியை காலி செய்து விட்டது. சரத்பவார் இருக்கும் இடம் தெரியாமல் செய்து விட்டனர். அதே போல், அதிமுகவுடன் கூட்டு வைத்து, அதிமுகவை சிதைத்து அழிக்கும்.பாஜவை அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பாஜவை எதிர்த்து போராடுகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பாஜ மட்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வைத்துள்ளது. இதை வைத்து, தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கும். இதனை தடுக்க, தமிழகத்தில் திமுக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு சண்முகம் பேசினார்.

Tags : BJP ,AIADMK ,Shiv Sena ,Marxist Communist ,Dharmapuri ,Tamil Nadu ,Maharashtra ,State ,Shanmugam ,Marxist Communist Party ,CITU ,
× RELATED தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு