- ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு
- கும்பகோணம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- முஸ்லிம்கள்
- உலமா
- புதிய வக்ஃப் தீர்ப்பாயம்
- கோயம்புத்தூர்
- கும்பகோணம்…
* உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்வு
* டூவீலர் வாங்க மானியம் ரூ.50 ஆயிரமாக அதிகரிப்பு
* கோவையில் புதிய வக்பு தீர்ப்பாயம்
கும்பகோணம்: உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக உயர்வு உள்பட இஸ்லாமியர்களுக்கு 5 முக்கிய அறிவிப்புகளை கும்பகோணத்தில் நடந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த தாராசுரம் பைபாஸ் சாலையில் உள்ள வலையப்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மஹல்லா ஜமா அத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு நேற்று மாலை நடந்தது. கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த மாநாட்டில் ஐந்து முக்கிய அறிவிப்புகளை, உங்களுக்காக – உங்களில் ஒருவனாக வெளியிட விரும்புகிறேன். முதலாவது அறிவிப்பு – தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவுபெற்றுள்ள 1,537 உலமாக்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமும், 44 உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் ஆயிரத்தி 500 ரூபாயும் இப்போது வழங்கப்படுகிறது. இனி, 5 ஆயிரம் ரூபாயாக ஓய்வூதியமும், 2 ஆயிரத்தி 500 ரூபாயாகக் குடும்ப ஓய்வூதியமும், உயர்த்தி வழங்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு – உலமாக்கள் நலவாரியத்தில் 15 ஆயிரத்தி 60 உலமாக்கள் இருக்கிறார்கள். முதற்கட்டமாக இதில், ஆயிரம் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான அரசு மானியத் தொகை, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு – ஏற்கனவே சென்னை மற்றும் மதுரையில் வக்பு தீர்ப்பாயம் செயல்பட்டு வரும் நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூடுதலாக ஒரு வக்பு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
நான்காவது அறிவிப்பு – கல்லறைத் தோட்டம் மற்றும் கபரிஸ்தான்கள் இல்லாத இடங்களில் மாநகராட்சிகளால் அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டு, அவை அமைக்கப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு – அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கும் 10 உருதுமொழி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இந்த அறிவிப்புகள் எல்லாம் மகிழ்ச்சிதானே? இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இன்றைக்கு இருக்கும் ஒரே மாநிலம், தமிழ்நாடுதான் அதற்குக் காரணம் திமுக. துரோகங்களுக்கான அர்த்தமாக அகராதிகளில் இடம்பிடித்திருக்கும். பத்து தோல்வி பழனிசாமி, முஸ்லிம்களுக்கு எதிரான தன்னுடைய பயணத்தை தொடர்ந்துகொண்டு இருக்கிறார். 2019ல் குடியுரிமைத் திருத்த சட்டம் நிறைவேறுவதற்கு, அதிமுக அந்த மசோதாவை ஆதரித்தது. அதிமுகவின் ஆதரவு இல்லை என்றால், அந்த மசோதா மாநிலங்களைவையில் தோல்வி அடைந்திருக்கும். ஆனால் பழனிசாமி, “அந்த சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள்?” என்று பாஜவிற்கு ஆதரவாக அதிமேதாவித்தனமாக சட்டமன்றத்தில் பேசினார். அவைக்குறிப்பில் இடம் பெற்றிருக்கிறது. மறுக்க முடியாது.
2020ல் அந்த சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் மக்கள் போராடியபோது தடியடி நடத்தினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், திமுகதான் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக, கையெழுத்து இயக்கம் நடத்தினோம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள், அந்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வாதிட்டோம், போராடினோம். ஆனால், பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்ற மறுத்தார்கள். ஆனால், 2021ல் நாம் ஆட்சிக்கு வந்தவுடன், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்றினோம். அப்போதுகூட, அதிமுக அந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. பாஜவிற்கு பயந்து, தங்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று பொய்யை சொல்லி வெளிநடப்பு செய்தார்கள்.
முத்தலாக் தடை சட்டத்திலும் இரட்டை வேடம் போட்டது அதிமுக. அடுத்து, வக்பு சட்டத் திருத்தம். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் கடுமையாக போராடினோம். பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், அதிமுகவின் லட்சணம் என்ன தெரியுமா? எங்கே மக்கள் முன்னால் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், அந்த தீர்மானத்தை ஆதரித்தாலும், தங்களின் டெல்லி எஜமானர்கள் கோபித்து கொள்வார்களோ என்று, நாம் கொடுத்த கருப்பு பேட்ஜைக்கூட போட்டு கொள்ளாமல் ஓடி ஒளிந்தார்கள். சட்டமன்றத்தில் இந்த நாடகம் என்றால், நாடாளுமன்றத்தில் அன்றைக்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை அவர்கள், 11 வினாடிதான் பேசினார். அதிலும், வக்பு மசோதாவை நிராகரிக்க வேண்டும், முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தாமல், பாஜ அரசிடம் கோரிக்கை வைத்து கொண்டு இருந்தார்.
இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் என்று, சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிமுகவின் சதி எண்ணத்தை நீங்கள் உணர வேண்டும். திமுக தொண்டர்கள் வீதி வீதியாக , வீடு வீடாகப் பரப்புரையைத் தொடங்கி விட்டது போன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்களும், உடனடியாக தங்களுடைய பரப்புரையை தொடங்குங்கள். நாம் ஒற்றுமையாக இருந்தால் எந்த சூழ்ச்சிகளாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது. சுயநலத்துக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைத்திருக்கும் அடிமைகளுக்கும், அவர்களுக்குக் கட்டளையிடும் டெல்லி எஜமானர்களுக்கும் புரிவது போன்று, உரக்க சொல்வோம், உறுதியோடு சொல்வோம், தன்மானமிக்க தமிழ்நாடு தலைகுனியாது, ஒருபோதும் அடிபணியாது, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு அவர் பேசினார்.
* ‘திருச்சியில் 10 லட்சம் பேர் திரளும் மாபெரும் மாநாடு’
கும்பகோணம் அடுத்த தாராசுரம் பைபாஸ் சாலையில் உள்ள வலையப்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 9.25 மணிக்கு திருச்சி வந்தார். அங்கிருந்து காரில் திருச்சி கலைஞர் அறிவாலயம் சென்ற முதல்வர், முன்னாள் எம்எல்ஏ பரணிகுமார் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசுகையில் அடுத்து மகளிர் அணி மாநாடு ஒரு பக்கம், இளைஞரணி மாநாடு ஒரு பக்கம். நிறைவாக தேர்தலுக்கு முன் இதே திருச்சியில் 10 லட்சம் பேர் திரளும் பெரிய மாநாட்டை நேரு நடத்த இருக்கிறார் என்று தெரிவித்தார்.
* கும்பகோணத்தில் ஒரு கி.மீ. தூரம் முதல்வர் ‘ரோடுஷோ’: மக்கள் உற்சாகம்
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக வாகனத்தில் கும்பகோணம் வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, வாகனத்தில் இருந்து இறங்கி ‘ரோடுஷோ’ நடத்திய முதல்வர், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சாலையில் இருபுறமும் கூடியிருந்த திமுக தொண்டர்கள், பொதுமக்களுக்கு கை கொடுத்தார்.
