×

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்தக் கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: வங்கி சேவைகள் கடுமையாக பாதிப்பு, ஏடிஎம் சேவையும் முடங்கியது

சென்னை: வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்தக் கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் உள்ள வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை உள்ளது. அது மட்டுமல்லாமல் வாரத்தில் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகள் விடுமுறையாகும். இந்த நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்காக வாரத்தில் 5 நாட்கள், அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் கூடுதலாக 40 நிமிடங்கள் வேலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால் வேலை நேரம் குறையும் என்றாலும், கூடுதல் நேரம் வேலை செய்வதன் மூலம் அதை ஈடுசெய்ய முடியும் என்று வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சம்மேளனத்துடன் ஒன்றிய அரசு அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து ஜனவரி 27ம் தேதி (நேற்று) நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை, வெளிநாட்டு, பிராந்திய கிராம மற்றும் கூட்டுறவு வங்கிகள் என 1.65 லட்சம் கிளைகளை சேர்ந்த 8 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 16 ஆயிரம் கிளைகளை 45 ஆயிரம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

அதாவது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். அதே நேரத்தில் எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் போன்ற தனியார் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை.

ஏற்கனவே சனி, ஞாயிறு மற்றும் குடியரசு தினம் என 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. தொடர்ந்து 4வது நாளான நேற்று வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் முடங்கியது. வங்கிகளுடன் இணைந்துள்ள ஏடிஎம்களுக்கு வங்கி ஊழியர்கள் தான் பணத்தை நிரப்புவது வழக்கம்.

கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை என்று தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்தது. இதனால், வங்கிகளுடன் இணைந்த ஏடிஎம்களில் நிரப்பட்ட பணம் தீர்ந்தது. நேற்று 4வது நாள் என்பதால் ஏடிஎம்களிலும் பணம் தீர்ந்தது. இதனால், நேற்று காலை முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாத நிலை உருவானது. பணம் இருந்த ஏடிஎம்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு கியூவில் நின்று வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்து சென்றனர்.

இதனால், பணம் இருந்த ஏடிஎம்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலை தான் சென்னையில் பெரும்பாலான ஏடிஎம்களில் ஏற்பட்டிருந்தகை காண முடிந்தது. சென்னையில் பாரிமுனையில் உள்ள யூனியன் வங்கி அலுவலக வளாகத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் பேசுகையில், “வாரம் 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த கோரி நாடு முழுவதும் 1.65 லட்சம் கிளைகளில் பணியாற்றும் 8 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 16 ஆயிரம் கிளைகளில் பணியாற்றும் 45 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் நாடு முழுவதும் வங்கி சேவை பாதிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு பணம் பெற முடியாமலும், செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது போல், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும். ரயில்வே, ரிசர்வ் வங்கி, எல்ஐசி, ஐடி நிறுவனங்களில் வாரம் 5 நாட்கள் வேலை முறை அமலில் இருக்கிறது. ஒரு நாள் ஸ்டிரைக்கால் தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான காசோலை பரிவர்த்தனைக்கு அனுப்ப முடியாமல் முடங்கியது.

கோரிக்கை நிறைவேற்ற காலதாமதம் ஏற்பட்டு வருகிறது” என்றார். 3 நாட்கள் விடுறை மற்றும் ஒரு நாள் ஸ்டிரைக்கிற்கு பிறகு இன்று வங்கி ஊழியர்கள் பணிக்கு திரும்புகின்றனர். இதனால், இன்று வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பிற்பகலுக்கு மேல் தான் வங்கிகளின் நிலைமை சீராகும் என்றும் கூறப்படுகிறது.

Tags : Chennai ,India ,
× RELATED சாத்தனூர் அணையில் இருந்து இன்று முதல்...