சென்னை: பொது சாலைகள் மற்றும் தெருக்களை ஆக்கிரமித்து, மத வழிபாட்டு கட்டிடங்கள் அமைக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை திரு.வி.க.நகர் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தனது வீட்டுக்கு முன் தெருவை ஆக்கிரமித்து அன்னை வேளாங்கண்ணி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்துக்கு சட்டவிரோதமாக மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், அந்த இடம் சர்க்கார் புறம்போக்கு நிலமாகும். பொது சாலை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை அகற்றுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, பொதுப்பாதையில் மத கட்டமைப்புகள் கட்டுவதற்கு எந்த ஒரு நபருக்கும் உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. அத்தகைய ஆக்கிரமிப்புகளை மத உணர்வுகளை காரணமாகக் கூறி நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
