- AMMK
- திண்டிவனத்தில்
- செஞ்சி
- Mayilam
- விழுப்புரம் மாவட்டம்
- எம்.டி. முத்து
- விழுப்புரம்
- டிடிவி தினகரன்...
மயிலம், ஜன. 28: விழுப்புரம் மாவட்ட அமமுக செயலாளர் அதிருப்தியில் இருப்பதால் திண்டிவனம், செஞ்சி, மயிலம் பகுதிகளில் அக்கூடாரம் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளராக திண்டிவனம் பகுதியை சேர்ந்த எம்.டி.முத்து என்பவர் இருந்து வருகிறார். தவெகவுடன் கூட்டணி பேசிவந்த டிடிவி தினகரன் திடீரென அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்தார். இதனால் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்பியுமான சி.வி.சண்முகத்திடம் சென்று மீண்டும் நிற்க வேண்டிய சூழல் ஏற்படும் எனக் கருதிய அம்மாவட்ட அமமுகவினர் டிடிவி தினகரன் மீது அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது.
சிவி சண்முகம் முன்பு கைகட்டி தலைகுனிந்து நிற்பதைவிட, கட்சியை விட்டு விலகுவதேமேல் எனக் கருதிய மாவட்ட செயலாளர் முத்து, திண்டிவனம், செஞ்சி, மயிலம் பகுதிகளைச் சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் கட்சி தாவும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது ஆதரவாளர்களை ரகசியமாக அழைத்து பேசி வருவதால் விழுப்புரம் மாவட்ட அமமுக தொண்டர்களிடம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அமமுக நிர்வாகிகள் பலர், அதிமுகவுடன் கூட்டணிக்கு எதிராக வெளியேறி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலும் அமமுக கூடாரம் விரைவில் முழுமையாக காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
