நியூயார்க்: அரசின் கொள்கையாக தீவிரவாதத்தை பயன்படுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் அதே ஆண்டு மே மாதம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் எல்லை தாண்டிய நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தானை மிக மோசமான அண்டை நாடு என்றும், முக்கிய நகரங்களில் தீவிரவாத பயிற்சி முகாம்களை பாகிஸ்தான் வெளிப்படையாக நடத்துவதாகவும் கடுமையாக விமர்சித்திருந்தார். இத்தகைய எல்லை தாண்டிய காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து இந்திய குடிமக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு எனவும் அவர் உறுதியாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச சட்ட விதிகள் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, தூதர் பர்வதநேனி ஹரிஷ் மிகக் கடுமையான பதிலடியை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,
‘தீவிரவாதத்தை அரசு கொள்கையின் கருவியாக பாகிஸ்தான் தொடர்ந்து பயன்படுத்துவதை சகித்துக் கொள்வது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதே பாகிஸ்தானின் ஒரே நோக்கமாக உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகே இந்தியா தரப்பில் பொறுப்பான பதில் வழங்கப்பட்டது. பாகிஸ்தான் எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு தனது ஆதரவை நம்பகமான மற்றும் மாற்ற முடியாத வகையில் முடிவுக்குக் கொண்டுவரும் வரை, 65 ஆண்டுகள் பழமையான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். மேலும், தனது சொந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பற்றி பாகிஸ்தான் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ என்றார்.
