×

விளைச்சல் இருந்தும் விலையில்லை

கோவில்பட்டி, ஜன. 26: தூத்துக்குடி மாவட்டத்தில் விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் சேனைக்கிழங்கு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி, பசுவந்தனை, குருவார்பட்டி, நாகலாபுரம், கோடாங்கிபட்டி, வவ்வால்தொத்தி, ரகுராமபுரம், கவுண்டன்பட்டி போன்ற பல கிராமங்களில் உள்ள தோட்டப் பாசன நிலங்களில் பாத்தி அமைத்து கடந்த வைகாசி மாதம் ஏக்கருக்கு 2 ஆயிரத்து 500 கிலோ விதை சேனை கிழங்கு ஊன்றப்பட்டது. விதை ஊன்றுவதற்கு முன்னர் சுழல் உழவு, சட்டி உழவு, பல் உழவு செய்து மாட்டுச் சாணம் அடி உரமாக இட்டு விதைக் கிழங்கு ஊன்றப்பட்டது. விதை கிழங்கு ஊன்றிய நாளில் இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் பாய்ச்சப்பட்டது. 20வது நாளில் கிழங்கு முளைப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் 40 நாட்களுக்கு ஒரு முறை மேலுரமாக கடலைப்புண்ணாக்கு இடப்பட்டது.

அதேபோல் முளைப்பு ஏற்பட்ட நாளில் இருந்து வாரம் ஒரு முறை சேனைச் செடிக்கு நீர் பாய்ச்சி 2 வாரத்திற்கு ஒரு முறை செடியை சுற்றி முளைக்கின்ற களைகளை அப்புறப்படுத்தினர். அவ்வப்போது சேனை கிழங்கு செடிக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கப்பட்டது. விதைசேனை கிழங்கு ஊன்றி 10வது மாதத்தில் முழுமையாக 5 கிலோ முதல் 8 கிலோ வரை சேனை கிழங்கு விளைந்தது. ஏக்கருக்கு 12 டன் அதாவது 12 ஆயிரம் கிலோ விளைச்சல் கிடைக்கும்.

ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்ய கிராமங்களுக்கு படையெடுத்து வருவர். விளைந்த கிழங்கை தோண்டிப் பார்த்து விவசாயிகளிடம் நடப்பு விலையை கூறுவர். விதைக் கிழங்கு கிலோ 30 ரூபாய்க்கு வாங்கிய நிலையில், தற்போது விளைந்த கிழங்கு கிலோ 8 ரூபாய்க்கு மட்டுமே கேட்கின்றனர். வழக்கமாக பொங்கலுக்கு முன் அறுவடை செய்தால் கிலோவிற்கு ரூ.40 வரை விலை என கிடைக்கும் எதிர்பார்த்தனர். ஆனால் பொங்கலுக்கு முன்பிருந்தே விலை படு மந்தமாக இருந்து வருகிறது. கோடை உழவு முதல் உரமிட, தண்ணீர் பாய்ச்ச, மேலுரம் புண்ணாக்கு, களை பறிக்க என ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு ஏற்பட்டது. கடந்த வருடம் ஒரு டன் ரூ.40 ஆயிரம் வரை கிடைத்தது. தற்போது ஆயிரம் கிலோவிற்கு 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே விலை போகிறது. பொங்கல் பண்டிகைக்கு கூட விலை கூடுதலாக கிடைக்கவில்லை. இதனால் போதிய விலை கிடைக்காததால் அறுவடை செய்யாமல் நிலத்திற்கு அடியிலேயே விளைந்த சேனைக்கிழங்கை விட்டு விட்டனர்.

இன்னும் 2 மாதத்தில் சித்திரை மாதம் வரை அறுவடை செய்யாமல் விட்டு விட்டால் கிழங்கு சொத்தை ஏற்பட்டு பயனின்றி போய்விடும். ஏறக்குறைய 10 மாத காலமாக உழைத்து, முதலீடு செய்து போதிய விலை இல்லாததால் சேனை சாகுபடி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். எனவே அரசு சேனை கிழங்கு சாகுபடி விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Kovilpatty ,Tothukudi district ,Thoothukudi District ,Koppampatty ,Vasuandana ,Guruvarpatty ,Nagalapuram ,Kodangipatty ,Vavwalthoti ,
× RELATED ரூ.1.41 கோடியில் கட்டிய எரிவாயு மின் தகனமேடை திறப்பதில் சிக்கல்