×

ரூ.1.41 கோடியில் கட்டிய எரிவாயு மின் தகனமேடை திறப்பதில் சிக்கல்

ஆறுமுகநேரி, ஜன. 26: ஆறுமுகநேரியில் ரயில் நிலையம் அருகேயுள்ள பாதையை அடைத்து நிர்வாகம் பிடிவாதம் காட்டுவதால் ரூ.1.41 கோடி மதிப்பில் கட்டப்பட்ட எரிவாயு மின் தகன மேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்களை வெளியூர்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை நீடிப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

ஆறுமுகநேரி பேரூராட்சி 18 வார்டுகளை கொண்ட நிலையில், சுற்றுவட்டாரத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பல்வேறு சமயத்தினரும், சமுதாயத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பிற ஊர்கள் மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் இப்பகுதியில் பணி செய்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட மதம் மற்றும் சமூகத்தினருக்கு மட்டுமே கல்லறை தோட்டங்களும், இடுகாடுகளும் உள்ளது. பல்வேறு சமூகத்தினர் இறந்த உடல்களை புதைக்கவும், எரிக்கவும் வேறு ஊர்களுக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட ஒரு சில சமூகத்தினர் தங்கள் உறவினர்கள் இறந்த நிலையில் அவர்களின் உடல்களை எரியூட்டுவதற்காக நெல்லை அருகே உள்ள செய்துங்கநல்லூர் வரை கொண்டு சென்று பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இதைத்தொடர்ந்து ஆறுமுகநேரி ரயில் நிலையம் மற்றும் இணைப்பு சாலை அருகே ரூ.1.41 கோடி மதிப்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் எரிவாயு மின் தகன மேடை அமைக்கும் பணி, கடந்த 2023ம் ஆண்டு அடிக்கல் நாட்டி பணி துவங்கப்பட்டது.

ஆரம்பத்தில் இப்பகுதி குடியிருப்புவாசிகள் எரிவாயு மின் தகனமேடை அமைக்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு இப்பணிகளை தொடர மக்கள் சம்மதித்தனர். எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி முடிவடைந்து 6 மாத காலங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. ரயில் தண்டவாளம் அருகேயுள்ள இணைப்பு சாலைக்கு அருகே எரிவாயு மின் தகன மேடை அமைத்ததால் இவ்வழியாக இறந்த உடல்களையும் கொண்டு வரக் கூடாது.

பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்தக் கூடாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சாலையில் இருந்து மின் தகன மேடை செல்லும் ரயில்வே இணைப்பு சாலையின் நடுவில் தடுப்பு கம்பிகள் வைத்து தடை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தற்போது வரை எரிவாயு மின் தகன மேடை திறக்க வழியில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து முறையான நடவடிக்கை மேற்கொண்டு எரிவாயு தகன மேடையை பயன்பாட்டிற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Arumuganeri ,
× RELATED விளைச்சல் இருந்தும் விலையில்லை