தேன்கனிக்கோட்டை, ஜன.26: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காட்டில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை, அடிக்கடி மரகட்டா காட்டில் இருந்து வெளியே வந்து, சாலையில் நின்றுகொண்டு உணவு தேடி வருகிறது. நேற்று முன்தினம் இரவு, மரகட்டா அருகே சாலையோரம் புளியமரத்தின் மறைவில் நின்ற ஒற்றை யானை, புளிய மரத்தில் கிளைகளை உடைத்து உணவாக சாப்பிட்டு கொண்டிருந்தது. அதை பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சற்றுநேரம் கழித்து, யானை சாலையை கடந்து மீண்டும் மரகட்டா காட்டிற்குள் சென்றது. சாலையில் சுற்றி வரும் ஒற்றை யானையை, வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
