ஓசூர், ஜன.26: கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அருகே சாமல்பள்ளம் மற்றும் இம்மிடி நாயகனப்பள்ளி பகுதிகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால், இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதுகுறித்து மாணவர்கள் மற்றும் கிராம மக்கள், இப்பகுதியில் இரும்பு மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், இங்கு இரும்பு மேம்பால நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் பயன் பாட்டிற்கு வரும்போது, விபத்துகள் 100 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
