×

குற்றச்செயல்களை தடுக்க டூவீலர் ரோந்து திட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.24: திருட்டு, சமூக விரோத செயல்கள் உள்ளிட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில், 24 மணிநேர டூவீலர் ரோந்து திட்டத்தை மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி எஸ்.பி., அலுவலக வளாகத்தில், திருட்டு, சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், 24 மணி நேர டூவீலர் ரோந்திற்காக, 14 புதிய டூவீலர்களை வழங்கி எஸ்.பி., தங்கதுரை திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், அவசர அழைப்பு எண், 100 தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வுகாணும் வகையிலும், 14 டூவீலர்கள், 24 மணிநேரமும் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, பர்கூர், கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, காவேரிப்பட்டணம், ஓசூர் டவுன், ஹட்கோ, சிப்காட், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் ராயக்கோட்டை ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளில் தினமும், 24 மணி நேரமும் ரோந்து செல்லும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அவசர அழைப்பு எண் 100 ஆகும்.

பெண்கள் பாதுகாப்பு, விபத்து, திருட்டு, சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அவசர அழைப்பு எண் 100ல் அழைத்தால், அப்பகுதியில் ரோந்தில் இருக்கும் போலீசார், குறுகிய நேரத்தில் விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பர். மேலும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், பஸ் ஸ்டாண்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்க டூவீலர் ரோந்து திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Krishnagiri ,District ,SP ,Thangadurai ,Krishnagiri SP ,
× RELATED சாத்தியக்கூறுகள் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை