×

அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியாமல் தவிப்பு உள்ளாட்சி பிரதிநிதிகள் வேதனை அரசு நிதி ஒதுக்காமல் அலைக்கழிப்பதால்

செங்கம், ஜன.29: அரசு நிதி ஒதுக்காமல் அலைக்கழித்து வருவதால் அடிப்படை கட்டமைப்பு பணிகள் கூட மேற்கொள்ள முடியாமல் தவிப்பதாக உள்ளாட்சி பிரதிநிதிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 2020ம் ஆண்டு 2ம் தேதி வாக்கு எண்ணிகை முடிந்தது. இதையடுத்து, புதியதாக ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு தலைவர்கள் என பதவி ஏற்று கொண்டனர். இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு முறையாக நிர்வாகம் குறித்து அரசு பயிற்சி அளிக்கவில்லை. மேலும், கிராம ஊராட்சிக்கு தேவையான கட்டமைப்பு பணிகளுக்கும், அடிப்படை பணிகளுக்கும் தமிழக மற்றும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லையாம். இதனால் எந்த ஊராட்சி கணக்கிலும் நிதி இல்லாமல் உள்ளது. இதனால், ஊராட்சி நிர்வாகம் நிதி பற்றாகுறையில் சிக்கி தவிப்பதாகவும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், தனி அதிகாரிகள் இருந்த காலத்தில் கூடுதல் நிதி இருப்பு இருந்த நிலையில் தற்போது கிராமப்புறங்களில் தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டகர்கள் கூட சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : representatives ,government ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...