×

எடப்பாடி சொந்த ஊரில் குழி தோண்டும் டிடிவி

சேலம்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியை தொடங்கினார். ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் மீட்பு கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் பாஜ- அதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்தனர். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறினர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் கூட்டணியில் சேர்க்க பாஜ கடும் முயற்சிகளை மேற்கொண்டது.

எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேருவதற்கு பதிலாக தூக்கு மாட்டி கூட தொங்கிடுவோம்’ எனவும், துரோகிகளுக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் பழனிசாமிக்கு கொடுக்கலாம் எனவும் டிடிவி தினகரன் கூறினார். இதற்கு எடப்பாடி பழனிசாமியோ, டிடிவி தினகரன் ஒரு 420 என கடுமையாக கூறினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் டிடிவி தினகரன் நேற்று பாஜ-அதிமுக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரனுக்கு நன்றி தெரிவித்தார்.

இதற்கிடையில் பாஜ-அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனின் கட்சிக்கு அதிகபட்சமாக 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. இதில் அக்கட்சியின் பொருளாளராக இருக்கும் சேலம் மாவட்டம் வீரபாண்டி எஸ்.கே.செல்வத்திற்கு ஒரு தொகுதியை பெற்றுக்கொடுக்க தினகரன் முயற்சி மேற்கொண்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் 11 தொகுதிகள் இருக்கிறது.

தற்போது அதிமுக 8 எம்எல்ஏக்களும், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரது ஆதரவாளர்கள் 2 பேர் எம்எல்ஏக்களாக இருக்கிறார்கள். சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என கூறிவரும் நிலையில் வீரபாண்டி தொகுதி தினகரனின் அமமுகவுக்கு ஒதுக்கப்படும் வாய்ப்பே இல்லை என அதிமுகவினர் கூறிவருகின்றனர். எஸ்.கே.செல்வம் ஏற்கனவே வீரபாண்டி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

ஜெ அணி-ஜா அணி என கட்சி 2 ஆக பிரிந்தபோது, வீரபாண்டி தொகுதியில் ஜெ அணியில் சேவல் சின்னத்தில் எஸ்.கே.செல்வம் 32 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றதுடன், 2 ஆயிரம் ஓட்டுக்கள் குறைவாக பெற்று தோல்வியடைந்தார். அந்த காலக்கட்டத்தில் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சேவல் சின்னத்தில் 19 ஆயிரம் ஓட்டுக்கள் பெற்று வெற்றிபெற்றார். இதனால் இருவரும் ஒரே காலகட்டத்தில் ஜெயலலிதா அணியில் இருந்ததால் யாருக்கு யாரும் இளைத்தவர் அல்ல என்ற நோக்கத்தில் அரசியல் செய்தனர்.

தினகரன் அணியில் எஸ்.கே.செல்வம் இருப்பதுடன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வருகிறார். எனவே வீரபாண்டி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்படாது என அதிமுகவினர் கூறிவருகின்றனர். சேலம் மாவட்டத்தை பொருத்தரையில் அன்புமணி பாமகவுக்கு 1 இடம் ஒதுக்கப்படும் எனவும் வேறுயாருக்கும் சீட் வழங்கப்படாது எனவும் உறுதியாக கூறுகின்றனர். என்றாலும் வீரபாண்டி தொகுதியில் சீட் பெற்று எஸ்.கே.செல்வம் போட்டியிடுவார் என அமமுக தொண்டர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

Tags : DTV ,Eadapadi ,Salem ,Dinakaran ,Adamuka ,Amuka ,Paneer Selvam ,Adimuga Volunteer Rescue Club ,Paja-Atamuga ,Edappadi Palanisamii ,
× RELATED துணை மருத்துவப் படிப்புகளுக்கும்...