×

ஈரான் போரால் கடும் தட்டுப்பாடு வர்த்தக சிலிண்டர் சப்ளை நிறுத்தம்: தமிழ்நாடு முழுவதும் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்

 

சென்னை: ஈரான்-இஸ்ரேல் போரால் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக தமிழகம் முழுவதும் வர்த்தக சிலிண்டர் சப்ளை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் சிறிய டீக்கடை முதல் பெரிய ஓட்டல்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. சென்னையில் ஓட்டல்களில் வெரைட்டி ரைஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதியம் சாப்பாட்டிற்கு சாம்பார், ஒரு கூட்டு மட்டும் வினியோகிக்கப்படுகிறது. இன்று முதல் ஓட்டல்களில் அனைத்து உணவு சேவையும் முழுவதும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போர் தொடுத்துள்ளன. ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதையடுத்து, ஈரானும் தனது தாக்குதலை அதிகரித்துள்ளது. இதனால், கடந்த பிப்ரவரி 28ம் தேதியில் இருந்து தொடர்ந்து கடுமையாக ஏவுகணை தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஈரான், தனது நாட்டை சுற்றியுள்ள சவுதிஅரேபியா, ஈராக், ஐக்கிய அரசு அமீரகம், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ ஏவுதளங்கள், முகாம்கள் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளது.

மேலும், உலக நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் லோடுகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை தடுத்துள்ளனர். ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், வளைகுடா கடலில் எண்ணெய் கப்பல்கள் தேங்கி நிற்கின்றன. இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள் வரமுடியாமல், ஓமன் வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் அதிகரித்துள்ளது.

இந்த அசாதாரண சூழலால், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்தியாவில் தற்போது உள்ள இருப்பு கச்சா எண்ணெய்யை வைத்து பெட்ரோல், டீசல் விநியோகத்தில் பாதிப்பில்லாமல் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை நிறுவனங்களும் பார்த்து கொண்டுள்ளன. ஆனால், சிலிண்டர் உற்பத்தியை மேற்கொள்வதற்காக திரவ சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பு மிக குறைவாகவே உள்ளது.

இந்த கச்சா எண்ணெய்யை குவைத், கத்தார், சவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தநிலையில், அதன் சப்ளை தான் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து அவசரத்திற்கு வாங்கியுள்ள கச்சா எண்ணெய் வந்தவுடன், சிலிண்டர் உற்பத்தியை பழைய நிலைக்கு கொண்டு வரும் முடிவில் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன.

இதனால் நாடு முழுவதும் உள்ள காஸ் சிலிண்டர் நிரப்பும் பாட்டிலிங் பிளாண்டுகளில் தற்போது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டர் சப்ளையை முழு வீச்சில் உற்பத்தி செய்து விநியோகிக்கின்றனர். இந்த வீட்டு சமையல் சிலிண்டர் சப்ளையில் எவ்வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என ஒன்றிய அரசு அறிவித்ததன் பேரில், எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தீவிர கண்காணிப்புடன் கூடிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதேவேளையில் வீட்டு சமையல் சிலிண்டர் உற்பத்தி, விநியோகத்தில் பாதிப்பு வராமல் இருக்க தற்காலிகமாக 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் உற்பத்தி, விநியோகத்தை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் குறைத்துக் கொண்டுள்ளன. நாட்டின் பெரும்பாலான இடங்களில் உள்ள காஸ் பாட்டிலிங் பிளாண்டுகளில் வர்த்தக காஸ் சிலிண்டர் உற்பத்தி நேற்று முன்தினம் மதியத்திற்கு பின் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த ஆலைகளில் இருந்து வர்த்தக சிலிண்டர் சப்ளை மேற்கொள்ளப்படவில்லை.

தமிழ்நாட்டை பொறுத்தளவில் சென்னை எண்ணூர், செங்கல்பட்டு, சேலம் கருப்பூர், ஈரோடு பெருந்துறை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, மயிலாடுதுறை ஆகிய 9 இடங்களில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பாட்டிலிங் பிளாண்டுகள் உள்ளன. இதுபோக பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு 5 பாட்டிலிங் பிளாண்டுகள் இருக்கின்றன. இந்த பாட்டிலிங் பிளாண்டுகளில் இருந்து 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஓட்டல், பேக்கரிகளுக்கு சிலிண்டர்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் சிறிய, பெரிய ஓட்டல்கள், பேக்கரிகள் மூடப்பட்டு வருகின்றன. உடனடியாக இந்த வர்த்தக சிலிண்டர் சப்ளையை சீர்செய்யாவிட்டால், அனைத்து நகரங்களிலும் ஓட்டல்கள், பேக்கரிகள், டீ கடைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வர்த்தக சிலிண்டர் சப்ளை இல்லாததால், ஓட்டல்கள் மூடப்படுவதாக அறிவித்து, மூடிவிட்டனர். இதேநிலை தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் முதல் ஓட்டல்களுக்கான வர்த்தக சிலிண்டர் விநியோகம் என்பது அடியோடு நிறுத்தப்பட்டது.

தற்போது இருக்கும் சிலிண்டர்களை வைத்து நேற்று உணவு பொருட்களை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கினர். வழக்கமாக காலை 6 மணிக்கு கடைகள் என்பது திறக்கப்படும். ஆனால், நேற்று உணவகங்கள் அனைத்தும் 7 மணிக்கு தான் திறக்கப்பட்டது. அதே நேரத்தில் சென்னையில் பல்வேறு ஓட்டல்களில் உணவு பொருட்கள் தயாரிப்பு என்பது முழுமையாக நடைபெறவில்லை. பெயரளவுக்கு தான் உணவு என்பது தயாரித்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மதிய உணவில் வெரைட்டி ரைஸ் உள்ளிட்ட பல பதார்த்தங்கள் ரத்து செய்யப்பட்டன. இதை அறிவிப்பாக ஓட்டல்கள் முன்பாக தொங்க விடப்பட்டுள்ள காட்சியை காண முடிந்தது. சில கடைகளில் தோசை, ஆம்லெட் கிடையாக்கும் என்றும் அறிவித்து இருந்தனர். டீக்கடைகளில் பஜ்ஜி, வடை போன்றவையும் நிறுத்தப்பட்டது.

மதிய சாப்பாட்டிற்கு வழக்கமாக சாம்பார், காரக் குழம்பு, மோர் குழம்பு, ரசம், பொரியல், அவியல், அப்பளம் என்று வழங்கப்படும். ஆனால், நேற்று மதியம் சாப்பாட்டிற்கு ஒரு வகை சாம்பார் மற்றும் ஒரு கூட்டு மட்டுமே வழங்கப்பட்டது. வகை வகையாக சாப்பிட்டு ருசித்தவர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. கடைசியில் இதாவது மிஞ்சியதே என்று வைத்த உணவினை சாப்பிட்டு சென்றனர். தற்போதுள்ள சிலிண்டர் என்பது நேற்று இரவுடன் முடிந்து விட்டது.

அதே நேரத்தில் கடை இயங்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டது. இன்று காலைக்குள் சிலிண்டர்கள் வந்தால் தான் ஓட்டல்களை திறக்க முடியும். இல்லாவிட்டால் ஓட்டல்களை மூடும் நிலைக்கு கடைக்காரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் உணவுடன் தங்கும் விடுதிகளிலும் வழங்கப்படும் உணவுகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு தங்கியுள்ளவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

* உணவுடன் தங்கும் விடுதிகளில் டீ, காபி, தோசை, சப்பாத்தி கட்

தமிழ்நாடு ஐ.டி ஊழியர்கள் விடுதி & பிஜி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விடுதிகளில் டீ மற்றும் காபி வழங்கப்படாது. சப்பாத்தி மற்றும் தோசை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. குருமா, சாம்பார் இல்லை. சட்னி மட்டும் வழங்கப்படும். சைட் டிஷ்க்கு பதிலாக மூன்று நாட்கள் பப்ஸ் அல்லது முட்டை வழங்கப்படும். இந்த அறிவிப்பால் அங்கு தங்கியிருப்பவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

* ஆம்லெட்டுக்கு ஆப்பு

வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் உணவு உற்பத்தி என்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சொல்ல போனால் எளிதில் தயாரிக்கும் உணவுகள் மட்டுமே தற்போது தயாரிக்கப்படுகின்றன. அதிகம் நேரம் எடுக்கும் உணவு பொருட்கள் தயாரிப்பு என்பது நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அசைவ ஓட்டல்களில் விரும்பி ஒவ்வொருவரும் சாப்பிடப்படும் ஆம்லெட் இனி கடைகளில் கிடையாது என்று கடைக்காரர்கள் திடீரென அறிவித்துள்ளனர். அதே போல தோசையும் நிலைமை சரியாகும் வரை கிடையாது என்றும் கடைக்காரர்கள் அறிவித்துள்ளனர். கடைகளில் அதிகம் விற்பனையானவது இதுபோன்ற பொருட்கள் தான். அதையே கடைக்காரர்கள் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* கொரோனா காலம்போன்று மீண்டும் தட்டுப்பாடு

சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களின் உரிமையாளர்கள் கூறியதாவது: பெரிய ஓட்டல்கள் என்றால் ஒரு நாளைக்கு வழக்கமாக 12 சிலிண்டர்கள் வரை செலவாகும். அதாவது, 33 கிலோ எடை கொண்ட சிலிண்டர் தேவைப்படும். இந்த சிலிண்டர்கள் காலியான உடனே காஸ் ஏஜென்சிக்கு ஆட்டோமெட்டிக்காக மெசெஜ் போய் விடும். உடனே சிலிண்டர்களை அவர்கள் கொண்டு வருவது வழக்கம். ஆனால், தற்போது சிலிண்டர் காலியாகி மெசேஜ் போனால் பதில் தருவது இல்லை. போன் போட்டு கேட்கலாம் என்றால் போனை ஆப் செய்து விட்டனர்.

இதனால், மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறோம். இருக்கும் சிலிண்டர்களை வைத்து இன்று (நேற்று) ஒரு நாள் கடைகளை நடத்தி விடலாம். உடனடியாக சிலிண்டர் வராவிட்டால் இன்று முதல் ஓட்டல்களை இயக்குவது என்பது முடியாத காரியம். கொரோனா காலத்தில் எப்படி தட்டுப்பாடு ஏற்பட்டதோ அதை நிலை தான் தற்போது வந்துள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டை இன்னொரு கொரோனா 2.0 என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பாதிப்பு என்பது உள்ளது. நிலைமை சரியாகாவிட்டால் ஓட்டல்களை நடத்த முடியாது. இந்த பிரச்னை தொடர்பாக டெல்லியில் ஒன்றிய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்றனர்.

* சிலிண்டர் புக் செய்யும் தொலைபேசி செயலிழப்பு

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற, கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள தங்கள் மொபைல் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். அதாவது 77189 55555 என்ற எண்ணில் 24 மணி நேரமும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். அத்துடன், இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். ஆனால், சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக 77189 55555 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் உபயோகத்தில் இல்லை என்று தகவல் வருகிறது.

பலமுறை விசாரித்தும் புதிய பதில் கிடைக்கவில்லை. எரிவாயு தட்டுப்பாடு ஏற்படப் போகிறதோ என்ற அச்சம் நிலவுகிறது. மாதம் ஒருமுறை பதிவு செய்தால் மட்டுமே எரிவாயு கிடைக்கும் என்றால் அதனை நிர்வாகம் முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காதது ஏன்? இதுதொடர்பாக ஊடகங்களில் உரிய செய்தியை வெளியிட்டால் தானே சமையல் எரிவாயுவுக்கு மக்கள் அல்லாடும் நிலை ஏற்படாது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எரிவாயு தட்டுப்பாடு தொடர்பான உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

* டீக்கடைகள் க்ளோஸ்

சிறிய டீக்கடைகளை நடத்துபவர்கள் கூறுகையில், ‘‘ஒரு கடைக்கு இரண்டு சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இருக்கும் சிலிண்டர்களை வைத்து கடைகளை நடத்தி வருகிறோம். இருக்கும் சிலிண்டர்கள் என்பது இன்று வரை தான் ஓடும். அதன் பிறகு சிலிண்டர் வந்தால் தான் கடைகளை நடத்த முடியும். இல்லாத பட்சத்தில் கடைகளை நடத்த முடியாது. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். சமைக்க அதிக நேரமாகும் உணவு பொருட்கள் தயாரிப்பதை நிறுத்தியுள்ளோம். அதே நேரத்தில் தங்கி பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும்’’ என்றனர்.

* சப்ளை தற்காலிக நிறுத்தம் ஐஓசிஎல் அறிவிப்பு

இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ காஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்கள், தொழிற்சாலைகள் மாற்று எரிபொருளை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி, போக்குவரத்து பாதிப்பு காரணமாக இந்நிலை ஏற்பட்டிருகிறது. வீட்டு சமையல் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பில்லை’’ என்றனர்.

* யார் எவ்வளவு சப்ளை?

இந்தியாவில் காஸ் சிலிண்டர் விநியோகத்தை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் மேற்கொள்கின்றன. இவற்றில் மொத்தமுள்ள இணைப்புகளில் 60 சதவீத அளவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர் வழங்குகிறது. பாரத் பெட்ரோலியம் 25 சதவீதமும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் 15 சதவீதமும் சப்ளை செய்கிறது.

Tags : Iran war ,Tamil Nadu ,Chennai ,Iran-Israel war ,Chennai… ,
× RELATED காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு முதல்வர்...