×

குறிப்பிட்ட உணவுகள் வழக்கமான நேரத்தில் மட்டுமே: பிரபல ஓட்டல் மெனுவில் அதிரடி மாற்றம்

 

சங்கீதா வெஜ் ஓட்டல் நிர்வாகம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கான அறிவிப்பு ஒன்று வெளிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: எங்கள் உணவகத்திற்கு தேவையான எல்பிஜி எரிவாயு விநியோகத்தில் தற்போது பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எங்களது முதன்மையான எரிபொருள் ஆதாரமே எல்பிஜி தான். அதனால் மார்ச்10ம் தேதி (நேற்று) முதல் அமலுக்கு வரும் வகையில் எங்கள் மெனுவில் தற்காலிகமாக மாற்றங்களைச் செய்துள்ளோம்.

அதாவது வரம்புக்குட்பட்ட மெனுவில் அத்தியாவசியமான உணவுகளில் மட்டும் கவனம் செலுத்தும் வகையில் உணவுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில குறிப்பிட்ட சிறப்பான உணவுகளை வழங்க இயலாது. மேலும் வழக்கமான உணவுகள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கிடைக்கும். சீரான விநியோகத்தை மீட்டெடுக்க எங்கள் விற்பனையாளர்களுடன் இணைந்து அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்த சவாலான நேரத்தில் உங்கள் ஆதரவிற்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* சிலிண்டர் பதுக்கினால் 7 ஆண்டு வரை சிறை

ஈரான் போர் தீவிரமடைந்த நிலையில், சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க, கடந்த 6ம் தேதி ஒன்றிய அரசு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை (எஸ்மா) அமல்படுத்தியது. இந்த சட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், வர்த்தக காஸ் சிலிண்டர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கினால், எஸ்மா சட்டத்தின் கீழ், 3 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு நேற்று எச்சரிக்கை செய்துள்ளது.

* ஓட்டல்களுக்கு சப்ளை புதிய குழு அமைப்பு

பல்வேறு நகரங்களில் வணிக எல்பிஜி சிலிண்டர்கள் பற்றாக்குறை குறித்த புகார்களை மதிப்பாய்வு செய்து, ஓட்டல்கள் மற்றும் உணவகங்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்யவும், எரிபொருள் கிடைக்கச் செய்யவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் 3 நிர்வாக இயக்குநர்கள் கொண்ட புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னுரிமையாக வீடுகளுக்கு சிலிண்டர் சப்ளையை குறித்த காலத்தில் விநியோகிப்பதை உறுதி செய்வது முக்கியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மற்ற நிறுவனங்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* முன்பதிவு இடைவெளி அதிகரிப்பு

வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு சிலிண்டர் பெற்ற பிறகு முன்பதிவு செய்வதற்கான இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பீதியடைந்து சிலிண்டர்களை பதுக்குவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* ஒன்றிய அமைச்சர்களுக்கு மோடி அதிரடி உத்தரவு

சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் இந்திய நுகர்வோர் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, ஒருங்கிணைந்து செயல்படுமாறு பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டார். மேலும் இந்திய நுகர்வோர் அதிக பெட்ரோலிய விலைகளின் சுமையைச் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் முன்னெச்சரிக்கையாக செயல்படும்படி அறிவுறுத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags : Sangeetha Veg Hotel ,
× RELATED மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட...