×

காஞ்சி காமகோடி பீடத்திற்கு சொந்தமான 3 யானையை பீடத்திடம் ஒப்படைக்க வேண்டும்: தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

சென்னை: காஞ்சிபுரம் காஞ்சி காமகோடி பீடத்தில் வழிபாட்டுகளுக்காக சந்தியா, இந்து, ஜெயந்தி ஆகிய 3 யானைகள் உரிய சான்றிதழுடன் கோயில் திருவிழாக்கள், பூஜைகளுக்கு அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த யானைகளை கவனித்து வந்த பாகன் 2015ல் காலமானதால், 3 யானைகளும் வனத்துறையிடம் பரமாரிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து திருச்சி எம்.ஆர் பாளையம் யானை காப்பகத்தில் 3 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், யானைகளை பராமரிக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால், கோனேரிக்குப்பம் யானைகள் மையத்துக்கு மீண்டும் அனுப்பக் கோரி காமகோடி பீடம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 3 யானைகளையும் காஞ்சி காமகோடி பீடத்திடம் 1 வாரத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து வனத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘யானைகளுக்கு வயதாகி விட்டது. 58 ஏக்கரில் உள்ள திருச்சி முகாமிற்கு மோசமாக உடல்நிலையில் 2019ம் ஆண்டு யானைகள் கொண்டு வரப்பட்டன.

8 யானைகள் இருந்த நிலையில் ஒரு யானை இறந்து விட்டதால், தற்போது 7 யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் யானைகளை மடத்திற்கு அனுப்பினால், மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்காத நீதிபதிகள், பீடத்துக்கு சொந்தமான யானைகளை 6 ஆண்டுகள் வனத்துறை வைத்துள்ளது. போதுமான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில், பீடத்திடம் யானைகளை தர வனத்துறை மறுக்க முடியாது. யானைகளை உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல் முறையீடு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Tags : Court ,Kanchi Kamakoti Peetham ,Chennai ,Kanchipuram ,Forest Department… ,
× RELATED மறைந்த தலைவர்களின் உருவச் சிலைகளை...