×

பெரும்பாக்கத்தில் பயங்கரம்; கல், பீர் பாட்டிலால் அடித்து ரவுடி படுகொலை: நண்பர்கள் 5 பேர் கைது

 

 

வேளச்சேரி: பெரும்பாக்கத்தில் மது அருந்த பணம் கேட்டு கொடுக்காத தகராறில், கல், பீர்பாட்டிலால் சரமாரி தாக்கி வாலிபரை படுகொலை செய்த நண்பர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதி யு.பிளாக்கில் உள்ள பூங்காவில் நேற்று இரவு தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் வாலிபர் மயங்கி கிடப்பதாக பெரும்பாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது மயங்கி கிடந்தவர் பெரும்பாக்கம் எழில்நகர் எஸ்.பிளாக்கை சேர்ந்த கார்த்திகேயன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்டு உடனடியாக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், கார்த்திகேயன் பழைய குற்றவாளி என்பதும், ஏற்கனவே பல குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றதும் தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று இரவு அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் குமார், விஜயகுமார், சரத் என்ற சரத்குமார், சரண்ராஜ், கார்த்திக் ஆகியோருடன் பார்க்கில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து அவர்களை தேடினர். அதே பகுதியில் மறைந்திருந்த குமார் (27), விஜயகுமார் (28), சரத் என்ற சரத்குமார் (35), சரண்ராஜ் என்ற கோகுல் (29), கார்த்திக் (26) ஆகிய 5 பேரையும் தனிப்படையினர் நேற்று கைது செய்து காவல்நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

இதில், இவர்கள் குடியிருக்கும் பகுதியில் பாபு என்பவர் இறந்துவிட்டார். இவரது சாவில் கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரும் மது குடித்துவிட்டு டான்ஸ் ஆடியுள்ளனர். போதை இறங்கிய நிலையில் கார்த்திகேயன் மீண்டும் மதுகுடிக்க குமாரிடம் பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என கூறியதால், கார்த்திகேயன், குமார் சட்டை பாக்கெட்டில் கையைவிட்டு பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, குமாரின் சட்டை பாக்கெட் கிழிந்துள்ளது. இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. குமார் அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து அன்றிரவு நண்பர்களான விஜயகுமார், சரத் என்ற சரத்குமார், சரண்ராஜ், கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து கார்த்திகேயனை தேடியுள்ளனர்.

கார்த்திகேயன் யூ பிளாக் பகுதியில் உள்ள பார்க்கில் மது அருந்திகொண்டிருந்தது தெரியவந்தது. அங்கு சென்றவர்கள் கார்த்திகேயனிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது, கார்த்திகேயன் வைத்திருந்த மதுபாட்டிலால் 5 பேரையும் தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த 5 பேரும் சேர்ந்து பீர்பாட்டில் மற்றும் கல்லால் கார்த்திகேயனை சரமாரி தாக்கியுள்ளனர். மயங்கி கீழே விழுந்ததும் பெரிய கல்லால் சரமாரி தாக்கிவிட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Perumbakkam ,Velachery ,Tamil Nadu ,Velachery… ,
× RELATED காதல் விவகாரத்தில் மோதல் கோவை தனியார்...