×

வெர்டிகோ பிரச்னைக்கு தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

மயக்கமாக இருக்கிறது, கண்கள் இருட்டிக்கொண்டு வருகின்றன, தலை சுற்றுகிறது, உடம்பு ‘ஸ்டெடி’யாக இல்லாமல் ஆடுவது போல் உள்ளது, தரை கீழே போவதுபோல உள்ளது, கண்ணைத் திறந்தால் கட்டடமே சுழல்வதைப் போல உள்ளது போன்றவற்றில் ஏதாவது ஒரு அறிகுறியுடன் நோய் குறைபாட்டுடன் சுமார் 20% பேர் புறநோயாளிகள் பிரிவில் அன்றாடம் வருகிறார்கள் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு குறிப்பு. இந்த மயக்கம் என்பதும், தலைசுற்றலும் வெர்டிகோ நோயின் அறிகுறியா? அல்லது வேறு ஏதும் பிரச்னையா என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜெ.பாஸ்கரன்.

சாதாரணமாக வரும் மயக்கம், கண்ணை இருட்டிக்கொண்டு வருதல் (Dizziness) போன்றவை ‘வெர்டிகோ’ அல்ல. பசி மயக்கம் முதல், மன இறுக்கம் வரை இதற்குப் பல காரணங்கள் உள்ளன. வெர்டிகோ என்பது, சுற்றி இருக்கும் கட்டடங்கள், பொருட்கள் எல்லாம் சுற்றுவதைப் போலத் தோன்றும் ஒருமனநிலை. தலையோ, உடம்போ ஆடாதபோதும், அவை முன்னும் பின்னும் அசைவதைப் போன்ற பிரமை, ஓர்உணர்வுதான் வெர்டிகோ எனப்படுகிறது. அது ஒரு வியாதியின் அறிகுறிதானே தவிர, வெர்டிகோ என்பதே வியாதியல்ல. சில சமயங்களில் வெர்டிகோவுடன் வாந்தி, காதில் இரைச்சல், காது கேளாமை போன்ற பிரச்னைகளும் உடன் இருக்கலாம்.

மூளைக்கு வெளியே ஏற்படும் காரணங்களால் வரும் வெர்டிகோ, மூளையில் (முகுளம் எனப்படும் ப்ரெயின் ஸ்டெம்ல்) ஏற்படும் காரணங்களால் வரும் வெர்டிகோ என இரண்டு வகை வெர்டிகோ சொல்லப்படுகின்றன. உட்செவியில் உள்ள ‘லேபிரிந்த்’ (Labyrinth) நமது சமநிலைக்கும், எட்டாவது நரம்பு நமது கேட்கும் திறனுக்கும் அவசியமானவை. இவை உட்செவியிலிருந்து, மூளையின் கீழ்ப்பகுதியான முகுளத்தின் மூலம், மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. உட்செவியிலோ அல்லது முகுளத்திலோ (சில சமயங்களில் சிறுமூளை பாதிப்பும்) ஏற்படும் குறைபாடுகளினால் வரும் அழற்சி, நோய்த்தொற்று, ரத்தஓட்டக் குறைபாடு போன்றவையும் நமது சமநிலையையும், கேட்கும் திறனையும் பாதிக்கக்கூடும். அதன் அறிகுறியாக வருவதுதான் ‘வெர்டிகோ’.

மிகவும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது வெர்டிகோ. ஆனாலும், நமது மூளை, கண் பார்வை மற்றும் சில மாற்று இணைப்புகள் மூலம் தானாகவே கட்டுக்குள் வரக்கூடியதுதான் வெர்டிகோ என்பதாலும், காரணத்தை அறிந்து அவற்றுக்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் பிரச்னைகளில் இருந்து வெளியே வந்துவிட முடியும் என்பதாலும் வெர்டிகோ குறித்து அச்சப்படத் தேவையில்லை. பொதுவாக 80% வெர்டிகோ, உட்செவியின் குறைபாடுகளாலும், சில மருந்துகளினாலும் வரக்கூடியது.

மற்ற 20% முகுளத்தின் ரத்தஓட்டக் குறைபாடுகள், முகுளத்தை அழுத்தும் வகைக் கட்டிகள் போன்றவற்றால் வரக்கூடியவை. இவை தவிர ஒற்றைத் தலைவலி (மைக்ரெய்ன்), சிலவகை வலிப்பு நோய்களாலும் வெர்டிகோ வரக்கூடும்! பொதுவாகவே, தலை அசைவு, கழுத்தசைவு, படுக்கையில் புரண்டு படுத்தல், கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி தலையைப் பின்பக்கமாக சாய்த்தல், உதாரணமாக, கொடியில் துணிகளை உலர்த்துதல், அலமாரியின் மேல்தட்டிலிருந்து பொருட்களை எடுத்தல் போன்றவற்றால் வெர்டிகோ வரக்கூடும். இவை வெர்டிகோவின் ட்ரிகர்ஸை(Triggers) தூண்டும் காரணிகள் ஆகும்.

சிலருக்கு, படுத்த நிலையிலிருந்து அல்லது உட்கார்ந்த நிலையிலிருந்து, எழுந்து நிற்கும்போது கூட தலைசுற்றுவது போன்று வெர்டிகோ வரக்கூடும் இது Postural vertigo எனப்படும். சில இதய நோய்களில், இம்மாதிரியான மயக்கங்களால் வெர்டிகோ வரக்கூடும். கவனம் தேவை.அதிகமாக உணவில் உப்பு சேர்த்துக் கொள்ளுதல் (மீனியர்ஸ் நோய்), மன இறுக்கம், தூக்கமின்மை, சில உணவுப் பொருட்கள், மைக்ரெய்ன், மது அருந்துதல், நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பது, கப்பல், விமானப் பயணங்கள் போன்றவைகளாலும் சிலருக்கு வெர்டிகோ தூண்டப்படலாம்.

வெர்டிகோ உள்ளவர்களின் சர்க்கரை அளவு, கொழுப்பு (கொலஸ்டிரால்) அளவு மற்றும் தைராய்ட் ஹார்மோன் அளவு ஆகியவற்றை பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொள்வது அவசியம். காது, தொண்டை, மூக்கு சிறப்பு மருத்துவரின் ஆலோசனையின் பேரில், ‘கலோரிக்’ டெஸ்ட், BERA என்கிற முகுளம் சார்ந்த மின் அலை டெஸ்ட், ஆடியோகிராம் மற்றும் உட்செவிக்கான ஸ்கேன் போன்றவை தேவைப்படலாம். மூளை, முகுளம் சம்பந்தமான வெர்டிகோவிற்கு, சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் போன்றவை, சில கட்டிகள் (C.P.angle tumours), ஸ்ட்ரோக், மல்டிபிள் ஸ்க்ளிரோசிஸ் போன்ற வியாதிகளைக் கண்டறிய உதவும்.

வெர்டிகோவிற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம். உடனடி நிவாரணத்திற்குச் சில மருந்துகள் (Antihistamines, benzodiazepines, antiemetics) மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம். மருத்துவ ஆலோசனையின்றி நீண்ட காலத்திற்கு இம்மருந்துகளை எடுத்துக் கொண்டால் பார்க்கின்சோனிசம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மிக்க கவனம் தேவை. சிலருக்கு, உட்செவி சம்பந்தமான அறுவைசிகிச்சை தேவைப்படலாம். மூளை சம்பந்தமான வெர்டிகோவிற்கு, அதன் காரணத்தை அறிந்து, அதற்கேற்றாற்போல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீண்ட கால வெர்டிகோவிற்கு, சில இயன்முறைப் பயிற்சிகள் செய்யலாம். Vestibular Rehabilitation Therapy இருக்கிறது. அது உட்செவி புனரமைப்புப் பயிற்சிகள் வெர்டிகோவிலிருந்து விடுதலை பெற உதவக்கூடும். இவையும் மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். சில காரணங்களுடன் கூடிய வெர்டிகோ, இந்தப்பயிற்சிகளுக்கு அடங்குவதில்லை! எப்படியிருந்தாலும், வெர்டிகோ தானாகவே சரியாகி விடக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாலும், அதற்கு உரிய சிகிச்சைகள் உள்ளதாலும், வெர்டிகோ குறித்த அச்சமும், மயக்கமும், கலக்கமும் தேவையில்லை.

தொகுப்பு: ஸ்ரீ தேவி குமரேசன்

Tags : Kungumam ,
× RELATED இஞ்சி பூண்டின் மருத்துவ குணங்கள்!