×

தப்பித்து ஓடுவதும் ஆளுமை கோளாறுதானா ?

நன்றி குங்குமம் டாக்டர்

தப்பித்து ஓடுவதும் ஆளுமை கோளாறுதானா ? (Avoidant Personality Disorder)

1. உங்களுக்கு நெருக்கமான நபர் நீங்கள் எவ்வளவுதான் அன்பைக் கொட்டினாலும் அவர்களுக்குத் தேவையானதைச் செய்தாலும் மனநிறைவே இல்லாமல் உங்களைத் தவிர்த்து ஒதுங்கியே போகிறாரா?

2. குடும்ப விழாக்கள், பொது நிகழ்வுகள் போன்றவற்றில் நாட்டமின்றி இருக்கிறாரா?

3. நல்ல நிலைமை இருந்தாலும், பெரும்பாலும் அலட்சியமாக மிகச்சாதாரணவே உடை உடுத்திக் கொண்டு, மகிழ்ச்சியைத் தொலைத்தவர் போலவே எப்போதும் காணப்படுகிறாரா?

4. இதைச் சரி செய்து கொண்டால் நன்றாக இருக்குமே என்று சிறு மாற்றுக்கருத்தைச் சொன்னால் கூட ஏற்றுக்கொள்ள முடியாதவராக இருக்கிறாரா?

5. ஏதாவது முக்கியமான பிரச்சனை, வாக்குவாதம் என வந்துவிட்டால் பேசுவதைத் தவிர்ப்பதையே எப்போதும் தீர்வாக கருதுகிறாரா?

6. புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும், இருக்கும் உறவுகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் ஒருபோதும் அவர் இறங்கி வந்து முதலில் பேசமாட்டாரா?

கவனமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தவிர்ப்பு நிலையர் ஆளுமைக் கோளாறுகளின் ஆரம்பகட்ட அறிகுறிகள் இவை. தற்காலத்தில் தற்காப்பு இயங்குமுறை (Defence mechanism) என்ற பெயரில் அதி வேகமாகப் பரவி வரும் ஆளுமைக் கோளாறு இது.அமெரிக்கன் சைக்கியாட்ரிக் அசோசியேஷன் DSM 4 பகுப்பில் C தொகுப்பின்கீழ் இடம்பெற்றுள்ள இந்த தவிர்ப்பு நிலையர் ஆளுமைக் கோளாறானது உரிய காலத்தில் கவனிக்கப்படாவிட்டால் தொகுப்பு A பிரிவின் Paranoid, Scizoid, தொகுப்பு B பிரிவின் Narcissitic, Anti-Social போன்ற ஆபத்தான ஆளுமை கோளாறுகளாக நீட்சி அடையக்கூடும். எனவே, ஆரம்பக் கட்டத்திலேயே தவிர்ப்பு நிலை ஆளுமை கோளாறு குறித்து சரியாக புரிந்து கொள்வதும் சிகிச்சை எடுத்துக் கொள்வதும் மிக அவசியம்.

முதன் முதலில் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த Eugen Bleuler, ஜெர்மனியை சேர்ந்த Ernst Kretschmer ஆகிய இரண்டு உளவியல் மருத்துவர்கள்தாம் Schizoid எனும் தீவிர உளச்சிதைவு நோயிலிருந்து தவிர்ப்பு நிலை ஆளுமை கோளாறு என்ற தனிப்பட்ட பிரிவை உருவாக்கினார்கள். உளவியல் மேதை Ted Millon பிறரோடு நெருக்கமாக வேண்டும் என்று ஏங்குபவர்கள், ஆனால் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தோடு பதட்டமாகவே இருப்பவர்கள் என்று தவிர்ப்பு நிலையர்களுக்கு வரையறை இலக்கணம் கொடுத்தார். இந்த விளக்கம் பெரும்பாலான இதர ஆளுமைக் கோளாறுகளுக்கும் பொருந்தும் என்பதால் கூடுதலான விளக்கங்கள் தேவைப்பட்டன.

1980 – ஆம் ஆண்டின் DSM 3 தொகுப்பில் சமூகத்திலிருந்து ஒதுக்கம், நீடித்த பற்றாக்குறை (Inadequacy) மனநிலை, எதிர்மறை மதிப்பீடுகள் குறித்த நுட்பமான பயம் ஆகிய கூறுகளோடு Avoidant Personality disorder இணைக்கப்பட்டது.பிறர் தன்னை ஒதுக்கி விடுவார்களோ தனக்கு தகுதி இல்லையோ என்ற வெட்கத்தோடு (shyness) இவர்கள் இருப்பார்கள். மேலும் சுயதாழ் மதிப்பீட்டு (Low self esteem) நிலையில் இருப்பதால் சமூகத்தோடும், உறவுகளோடும் நல்லுறவைப் பேணுவது சிரமமாக இருக்கும்.

அப்படியானால் தவிர்ப்பு நிலையர்கள் Social Anxiety உள்ளவர்களா என்று கேட்டால், இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று சொல்லலாம். ஆனால் தவிர்ப்பு நிலையர் குறை சொல்வார்களோ என பயத்தோடு சமூகத் தொடர்புகளைத் தவிர்க்கிறார். தனக்கு நன்மை செய்யும் என்றால் கூட அவற்றைத் தவிர்க்கும் தீவிர நிலையில் இருக்கிறார். எல்லாவற்றையும் தவிர்ப்பது ஒன்றே தீர்வு என நம்ப ஆரம்பித்து விட்டார்.தான் அப்படி ஒதுங்குவது சரியே என்று அவர் அதை ஆணித்தரமாக நியாயப்படுத்தவும் செய்வார்.

ஆனால், Social anxiety உள்ளவர் குறிப்பிட்ட சில இடங்களில் தான் பொருந்தாமல் போவோமோ என்று ஒதுங்கிப் போகிறார். மற்றவர்கள் தன்னைத் தவறாக தீர்ப்பிடுவார்களோ என்று விலக எண்ணுகிறார். தான் இப்படி ஒதுங்கிப் போவதால் பல வாய்ப்புகளை இழக்கிறோம். இதனை சரி செய்து கொள்ள வேண்டும் என்று ஒப்புக்கொள்வார்.

AVPD ( Avoidant Personality disorder ), SAD (Social anxity disorder ) இரண்டிற்கும் ஆன இந்த அடிப்படை வேறுபாடுகளை அறியாமல் பலரும் இன்று இருக்கிறார்கள். சிலருக்கு AVPD தீவிர நிலையில் இருக்கும் ஆனால் இதனை வெறும் Social anxiety தான். பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை என்று விட்டுவிடுவார்கள். போலவே, சிலரின் சாதாரணமான சமூக விலகலை வைத்து தவிர்ப்பு நிலையர் என்றும் முடிவு கட்டி விடுவார்கள். எனவே, நாம் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் நம்முடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இருப்பின் உடனடியாக மனநல ஆலோசகரை உளவியல் மருத்துவரை நாடுவது நலம்.

ஏனெனில், வீட்டிற்குள்ளேயும் வெளியேயும் உள்ள பிணைப்பை பெருமளவு பாதிக்கக்கூடிய தன்மை கொண்ட ஆளுமைக் கோளாறு இது. தனக்குத்தானே ஆபத்து விளைவித்துக் கொள்கிறோம் என்பதை அறியாமல் இருக்கும் பரிதாப நிலையை எட்டி விட்டவர்கள். தான் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்து தவிர்த்து ஓடிக்கொண்டே இருப்பதே சரி என்ற தவறான நம்பிக்கையிலிருந்து வெளியே வர முடியாத சுழலுக்குள் இவர்கள் சிக்கிக் கொண்டவர்கள். தொடர்ந்து இவர்கள் இவர்களின் நலன் விரும்பிகள் (Well Wishers) மீது தவறான எண்ணம் கொண்டு அவர்களோடு பேசுவதையும் பழகுவதையும் தவிர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

இந்த உதவி வேண்டுமா ஏதேனும் வேண்டுமென்றால் கேள் என்னோடு பகிர்ந்து கொள் என்றெல்லாம் இறங்கி நீங்கள் போய் அவர்களிடம் உதவ முயற்சி செய்தாலும் வேண்டாம் வேண்டாம் என்று தவிர்ப்பார்கள். இதனால் ஒரு கட்டத்தில் இவர்களின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கூட, இவ்வளவு கேட்டும் மிகவும் அலட்சியம் செய்கிறார்களே ரொம்ப திமிர் போல.. வான்டட் ஆக போய் நாம் அவமானம் ஆக வேண்டுமா இனி எதற்கு இவர்களோடு தொடர்பு என்று சுயமரியாதைக் காக்க இடைவெளியை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

இந்த நிலை ஏற்படும்போது காப்பதற்கு யாரும் இல்லாத நிலையில் இவர்கள் தவறான நபர்களால் மனத்திரிபு (Manipulation) செய்யப்பட்டு ஏமாற நேரிடலாம். கல்வி, வேலை, திருமணம், இலக்கு என அவர்களே விரும்பி ஏற்றுக் கொண்ட எதிலும் முழுமையாக மனதைச் செலுத்த முடியாமல் தவிர்ப்பு மனநிலையோடு இருப்பார்கள். இதனால் எத்தனை திறமை வாய்ந்தவர்களாக ஆற்றல் பெற்றவர்களாக இவர்கள் இருந்தாலும், தவிர்ப்பு கோளாறு காரணமாக தம்முடைய தகுதிக்கு ஏற்ற இடத்தை அடைய முடியாமல் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்க நேரிடும்.

Cognetive Behavioural Therapy , Talk – Therapy போன்ற உளவியல் சிகிச்சைகள் ஓரளவு பயன் தரும் என்றாலும் உச்சநிலையை எட்டிய தவிர்ப்பு நிலையர்களை குணப்படுத்துவது மிகச் சிரமம். எனவே தவிர்ப்பு நிலையர் எனும் ஆளுமை கோளாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்வோம்.

மரபுக் காரணிகள், குடும்பத்தில் தீர்க்கப்படாமல் நீடித்த காலம் இருக்கும் மனச்சோர்வு, மனக்கவலை போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் AVPD ஏற்படக்கூடும். மேலும், சிறுவயதில் ஏற்பட்ட பாதிப்புகளும் AVPD – க்கு வழி வகுக்கலாம்.ஆகவே, மௌனம் சில நேரங்களில் தீர்வாகலாம். எப்போது மௌனம் ஆயுதம் எப்போது மௌனம் பலவீனம் என்பதில் தெளிவும் கவனமும் வேண்டும்.

முன்னோர்கள் கூறிய துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்ற பழமொழி அற்புதமான ஆலோசனையே. அதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தவிர்ப்பு நிலையர் ஆளுமைக் கோளாறு கொண்டவர்கள் நல்லோரைக் கண்டாலும் தவிர்த்து ஓடுவர். ‘தலைகீழ்ப் புரிதல்’ எனும் தீவிரத்தில் மாட்டிக்கொண்டு, தன் நலனையே தவிர்த்து உலகை வெறுக்கும் நிலையை வெகுவிரைவில் எட்டிவிடும் ஆபத்து கொண்டது இந்த தவிர்ப்பு நிலையரின் வாழ்வு. இப்படிச் சொல்வது அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கலாம்.

இருப்பினும், தற்காலத்தில் அதிரடியாக அதிகரித்து வரும் (Rapid growth) ஆளுமைக் கோளாறுகளில் இதுவும் ஒன்று. மேலும் இதர ஆளுமைக் கோளாறுகளைப் போல் AVPD பரவலாக அறியப்படாதது. AVPD குறித்து வெளிப்படையாகப் பேசுமளவுக்கு போதிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. எனவேதான் தெளிவான புரிதலை சமூக உளநலன் கருதி அழுத்தமாக வலியுறுத்திச் சொல்ல வேண்டியுள்ளது.

AVPD – யோடு நெருங்கிய தொடர்பு கொண்ட DPD எனும் சார்பு நிலை ஆளுமைக்கோளாறும் DSM 3 பிரிவில் உள்ளது. இரண்டுமே சில ஒற்றுமைகளையும், ஒரே விதமான சிகிச்சை முறைகளையும் கொண்டுள்ளது. ஆனால், மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால் தவிர்ப்பு நிலையர் தம்மை நெருங்கும் மனிதர்களைத் தவிர்த்துத் தள்ளி விடுகிறார்கள்.

சார்பு நிலையர் தமக்கு நெருக்கமானவர்களை ஒருபோதும் விடாமல் இறுகப்பற்றி நிற்கிறார்கள். ‘மனிதர்களே வேண்டாம்’ எனும் எதிர் மனநிலையும், இவரின்றி நானில்லை’ எனும் தேக்க மனநிலையும் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது? இவர்களை எப்படித்தான் கையாளுவது? இந்த ஆளுமைக் கோளாறுகளின் நடைமுறைச் சிரமங்கள் என்னென்ன?அடுத்த இதழில் சார்பு நிலையர்களையும் (Dependant ) சேர்த்து விரிவாகப் பேசுவோம்.

தொகுப்பு: மனநல ஆலோசகர் ஜெய ஸ்ரீ கண்ணன்

Tags :
× RELATED இயன்முறை மருத்துவமா? அறுவை சிகிச்சையா?