நன்றி குங்குமம் தோழி
இயற்கை 360°
கோதுமை என்றதும் நம் நினைவில் வருவது, கோதுமை அரிசி, கோதுமை ரவை, கோதுமை மாவு மற்றும் அதிலிருந்து தயாராகும் உணவுப் பதார்த்தங்களே. ஆனால், இது என்ன புதுசாக கோதுமைப் புல்!? ஆடு-மாடு போல நம்மால் புல்லை சாப்பிட முடியுமா என்கிற கேள்விக்கான பதிலை அறிய, 2026 புது வருடத்தில் கோதுமைப்புல்லுடன் ஒரு பயணம் மேற்கொள்வோம் வாருங்கள்..!
சார்லஸ் ஸ்னாபில் (Charles Schnabel) என்கிற அமெரிக்க வேளாண் விஞ்ஞானி, 1928ல், தான் பணிபுரிந்த ஸ்டாண்டர்ட் மில்லிங் கம்பெனியில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். அன்றைக்கு, கோழிப்பண்ணை வேளாண்மையில் 30 சதவிகிதம் பண்ணைக் கோழிகள் அன்றாடம் முட்டை இட்டாலே பெருவெற்றி என்றிருக்க, இளம் கோதுமை மற்றும் பார்லி புல்லிலிருந்து பெறப்பட்ட பச்சையம் நிறைந்த பொடியை கோழிக்கு தீவனமாய் அவர் சேர்த்த போது, கிட்டத்தட்ட அனைத்து கோழிகளுமே முட்டையிடுவதை அவர் கண்டார். இந்த ஆய்வைத் தொடர்ந்து, இளம் கோதுமைப் புல்லில் (Before Jointing Stage) வியக்கத்தக்க பற்பல சத்துமானங்கள்
நிரம்பியுள்ளன என்பதைக் கண்டறிந்த சார்லஸ், தனது குடும்பத்தினருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு உலர வைத்து, பொடித்த கோதுமைப் புல்லை வழங்கி வர, நோய் நொடியின்றி அவர்கள் வளர்வதை உறுதி செய்தார்.இதைத் தொடர்ந்து 1933ல், அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில், கோதுமைப் புல்லின் பொடியிலிருந்து சார்லஸ் தயாரித்த செரோஃபில் (Cerophyl) என்கிற வைட்டமின் மாத்திரைதான் உலகின் முதல் வைட்டமின் மாத்திரையாக உருவெடுத்தது. அதாவது, ‘டாக்டர், உடம்பு ரொம்ப டயர்டா இருக்கு… ஒரு வைட்டமின் மாத்திரையை ப்ரிஸ்க்ரைப் பண்ணுங்களேன்…’ எனச் சொல்லும்போது, மருத்துவர்கள் நமக்குப் பரிந்துரைக்கும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் தோன்றியதே இந்த கோதுமைப் புல்லிலிருந்துதான்! இந்த புதிய தகவலோடு, அப்படி என்னதான் இந்த கோதுமைப் புல்லில் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோமா?
சமீபகாலமாய் பெரிதும் பேசப்படுகிற கோதுமைப் புல்லின் தாவரப்பெயர் Triticum aestivum. தோன்றிய இடம் துருக்கி. தானியத்திற்கென வயலில் விளைகிற கோதுமைப் புல்லை இதற்கு பயன்படுத்துவதில்லை. பதிலாக, வீட்டிலேயே கோதுமையை முளைக்கட்டி, முளைப் பயிரின் இளம் இலைகளை 7 முதல் 14 நாட்களில் பறித்து, அதிலிருந்து பெறப்படும் சாறு அல்லது உலர வைத்தப் பொடிதான் இதற்கு பயன்படுத்தப்படுகிறது.உண்மையில், கோதுமைப் புல்லில் க்ளோரோஃபில் (Chlorophyll) எனும் பச்சையம் அதிகம் காணப்படுகிறது. இந்தப் பச்சை நிறமி, நமது சிவப்பணுக்களின் ஹீமோகுளோபின் உருவமைப்பை கொண்டது என்பதுடன், உடலுக்கு உடனடி சக்தியையும் அத்தியாவசிய சத்துகளையும் அள்ளித் தருகிறது.
குறைந்த கலோரிகளுடன் 70% பச்சையம் மற்றும் அதிகளவு புரதச்சத்து கொண்ட கோதுமைப் புல், 19 அத்தியாவசிய அமினோ அமிலங்கள், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, செலீனியம், மாங்கனீஸ் உள்ளிட்ட இன்றியமையாத 92 தாதுக்கள், வைட்டமின்கள் A, B காம்ப்ளெக்ஸ், C, E, K, சூப்பர் ஆக்சைட் டிஸ்ம்யூட்டேஸ் (Superoxide dismutase) உள்ளிட்ட நொதிகள் என, உடலுக்குத் தேவையான அனைத்து சத்துமானங்களையும் கொண்டுள்ளது.
மேலும், இதிலுள்ள, ஃபளாவனால்கள் (Flavonols), ஃபீனாலிக் சேர்க்கைகள் (Phenolic compounds), சல்ஃபானிக் அமிலம் (Sulfonic acid), ட்ரை-டெர்பனாயிடுகள் (Triterpenoids), ஆன்த்ரக்வினோல் (Anthraquinol) உள்ளிட்ட தாவரச்சத்துகள் இதன் அதீத ஆரோக்கிய குணங்களுக்குக் காரணமாகவும் இருக்கின்றன.சூரியசக்தி செறிந்த இதன் க்ளோரோஃபில், மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், குடல் மற்றும் கருப்பைக்கு பாதுகாப்பளிக்கிறது. ரத்த உற்பத்தியைப் பெருக்கும் இந்தப் புல், நச்சுகளை நீக்குவதுடன், செல்களின் வீக்கங்களையும் கட்டுப்படுத்துகிறது. செரிமான மண்டலத்தின் அமிலத் தன்மையைக் குறைத்து, நொதிகளைச் சுரக்கச் செய்து, செரிமானத்தைக் கூட்டுகின்ற இது, குடல் ஆரோக்கியத்தைக் காக்க வல்லது.
நோய் எதிர்ப்பைக் கூட்டி, தசைகளுக்கும் எலும்புகளுக்கும் வலிமை சேர்க்கும் இதன் சத்துகள், உடலின் பிற உறுப்புகளுக்கு உடனடி சக்தியைத் தருகிறது. குறிப்பாக, ரத்த சோகை, உடல் சோர்வு, சர்க்கரை நோய், உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், தூக்கமின்மை, அல்சைமர் நோய், தோல் நோய்கள், மூட்டு வலி, பற்சிதைவு, நாள்பட்ட குடல் அழற்சி நோய்கள் ஆகியவற்றிற்கு பயனளிக்கும் இந்த கோதுமைப் புல், ஹார்மோன்கள் சுரப்பதையும் சமன்படுத்துவதால், பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளை கட்டுப்படுத்துவதோடு, கருவுறுதல் விகிதத்தையும் கூட்டுகிறது.
வயோதிகத்தைக் குறைக்கும் ஆற்றலோடு, சருமத்தில் புற ஊதாக் கதிர்களின் பாதிப்பை குறைப்பதுடன், குறிப்பாக கருப்பை, மார்பகம், சினைப்பை, பெருங்குடல் பிராஸ்டேட் உள்ளிட்ட புற்று நோய்களின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது என முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.தானிய கோதுமையில் காணப்படும் க்ளூட்டன் (gluten) அலர்ஜி மற்றும் அதனால் ஏற்படும் குடல் அழற்சி நோய் கோதுமைப் புல்லில் இல்லை என்பதே இதன் கூடுதல் சிறப்பு. இப்படியாக அனைத்து குணங்களும் அதிகம் பெற்றிருப்பதால், திரவத் தங்கம் எனவும் பச்சை ரத்தம் எனவும் போற்றப்படுகிறது.
கோதுமைப் புல்லின் சாறை பிழிந்து வெறும் வயிற்றில் நேரடியாக அல்லது விற்பனையில் உள்ள இதன் பொடியை தண்ணீர் அல்லது குளிர் பானங்களில் கலந்தும் பருகலாம். கேப்ஸ்யூல் வடிவ மாத்திரைகளாகவும் இது கிடைக்கப் பெறுகிறது. ஒருசிலருக்கு கோதுமைப் புல்லின் சாறு அலர்ஜியை ஏற்படுத்தலாம். தொண்டை எரிச்சல், புளி ஏப்பம், செரிமான பிரச்னைகள் தோன்றக்கூடும் என்பதால், இதனை வெறும் வயிற்றில் உபயோகிக்கவே அறிவுறுத்தப்படுகிறது. அதிக ஆற்றல் மிக்க இந்த கோதுமைப் புல்லை நமது வீடுகளிலும் வளர்க்கலாம் என்பதே இதன் சிறப்பு. ஆனாலும், விற்பனைக்குப் பயன்படுத்தப்படுகிற கோதுமைப் புல், பெரும்பாலும் செயற்கையாக ஒளியூட்டப்பட்ட உள் கூடங்களிலும், கண்ணாடிக் கூரை பொருத்தப்பட்ட கூடாரங்களிலும் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகிறது.
வீடுகளில் வளர்க்க நினைப்பவர்கள், இயற்கை எரு கலந்த 7 தொட்டிகளில் ஒவ்வொரு நாளாக முளை கட்டிய கோதுமை மணிகளை அடுத்தடுத்து விதைத்து, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பின், ஜன்னலோரத்தில் இளவெயில் படும்படி தொட்டிகளை வரிசையாக வைக்க வேண்டும். ஏழாவது நாளில் முதல்நாளுக்குரிய புல் கிடைத்துவிடும். அடுத்த நாளுக்கான புல் இரண்டாம் தொட்டியிலும், அதற்கடுத்தது மூன்றாம் தொட்டியிலும் என தொடர வேண்டும். அறுவடை செய்த தொட்டியில் மீண்டும் கோதுமை மணிகளை விதைக்க, தொடர்ந்து கோதுமைப் புல் கிடைக்கும்.
பாஸ்டன் நகரின் ஹிப்போக்ராடிஸ் மருத்துவ நிறுவனத்தைச் சார்ந்த ஆன் விக்மோர் (Ann Wigmore), கோதுமைப் புல்லின் ஆற்றல்கள் அனைத்து நோய்களுக்குமான ஒரே தீர்வு என்று தேவையின்றி மிகைப்படுத்தியதால், ‘சூப்பர் ஃபுட்’ என்ற அடைமொழியுடன் அதீத உபயோகத்திற்கு இது ஆட்படுகிறது என்ற குற்றச்சாட்டும் இதற்கு உள்ளது.உண்மையில், இயற்கை அளிக்கும் மற்ற காய் கனிகளுக்கு கோதுமைப் புல் மாற்றல்ல. வலிமையைச் சேர்க்கும் சிறு துரும்புதான் என்கிற புரிதலுடன் நமது இயற்கையின் பயணம் புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லி நீள்கிறது.
தொகுப்பு: (இயற்கைப் பயணம் நீளும்!)
