சென்னை: தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டசபையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். 100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்கி ஜி ராம் ஜி என்று திட்டத்துக்கு பெயர் வைத்துள்ளது ஒன்றிய அரசு. 100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் தனி தீர்மானம் தாக்கல் செய்தார். காந்தி பெயரிலேயே 100 நாள் வேலை திட்டத்தை தொடர வலியுறுத்தி தனி தீர்மானம் கொண்டு வந்துள்ளார்
இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் கூறியதாவது:-தமிழ்நாட்டில் பாகுபாடின்றி மாநில மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறோம். இருப்பினும் தமிழ்நாட்டை வஞ்சிப்பதை மத்திய அரசு கொள்கையாக கொண்டிருக்கிறது. திட்டங்களுக்கு உடனடியாக நிதி விடுவிக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு செயல்படுகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ரூ.1,026 கோடியை ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. நிதியை விடுவிக்காததால் எளிய மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ஏன் இந்த ஓரவஞ்சனை? மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 100 நாட்கள் வேலையை உறுதி செய்து ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றன.
100 நாள் வேலை திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயரை நீக்கி பல்வேறு உள்நோக்கங்களுடன் விபி- ஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பெயரை மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டம் 2005-ன்படி கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வேலைக்கான தேவைக்கேற்ப, மாநில செயல்திறன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும். முந்தைய ஆண்டுகளின் ஒதுக்கீட்டிற்குக் குறையாமல் ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசே வகுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும். நம் மாநிலத்தின் மீது ஏன் இந்த ஓரவஞ்சனை என்றுதான் நாம் கேட்கிறோம்? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.2700 கோடி நிதியை ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.3000 கோடியும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்திலும் ரூ. 3112 கோடி நிதி இன்னும் விடுவிக்கவில்லை. மக்கள் குரலை மதிக்காத ஒன்றிய அரசு சட்டத்தை திருத்தியது
