×

சத்துணவு அமைப்பாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி

சென்னை: சத்துணவு ஊழியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்து உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது.

இதில் பங்கேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: சிஏஜி அறிக்கையில் 5 லட்சம் கோடி கடன் வாங்கிய நிலையில் அதில் 31 சதவிகிதம் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மீதமுள்ள அனைத்தும் கடனுக்கு வட்டி கட்டுவதாகவே குறிப்பிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி: தொழில் திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள். எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது? எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று சொன்னால் அமைச்சர் வெள்ளை பேப்பரை காட்டுகிறார்.

டிஆர்பி.ராஜா: இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு இதுகுறித்து ஒரு கருத்தரங்கே நடைபெற உள்ளது. பிப்ரவரி 12ம் தேதி நடைபெற உள்ள அந்த மாநாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் வர வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வரும் நிறுவனம் அனைத்து ஆய்வுகளை செய்த பின்னரே வருகிறது. சில நேரங்களில் அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் அந்த சலுகைகளை சில மாநிலங்கள் தர முன்வருவதால் நிறுவனங்கள் அவர்களை நாடலாம். ஆனால் அதிமுக ஆட்சியில் வந்ததெல்லாம் ஓடிப்போச்சு. அதனை விளக்கமாக சொல்லட்டுமா?

தங்கமணி: அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: அரசு ஊழியர்கள் போராடிக் கொண்டிருப்பதை மிகுந்த கவலையோடு, வருத்தத்தோடு, அக்கறையோடு உறுப்பினர் தங்கமணி குறிப்பிட்டிருக்கிறார். இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை? ஆனால், எங்களை பொறுத்தவரையில், திராவிட மாடல் ஆட்சியை பொறுத்தவரையில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை, அவர்கள் ஏதாவது கோரிக்கை வைத்து போராடுவது அவர்களின் உரிமை. ஆனால், உரிமையோடு போராடக்கூடிய அந்த போராட்டத்தைக்கூட முடிக்க வேண்டும்,

அது தொடரக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடு தொடர்ந்து அமைச்சர்கள் அவர்களை எத்தனையோ முறை அழைத்து பேசி, அதை எல்லாம் முழுக்க தீர்க்கவில்லை என்று சொன்னாலும் 95 முதல் 99 சதவிகிதம் தீர்த்து வைத்திருக்கிறோம். ஆனால், நாங்கள் எஸ்மா, டெஸ்மா கொண்டுவரவில்லை. இரவோடு இரவாக அவர்களைப்போய் கைது செய்யவில்லை. கொண்டுபோய் ஜெயிலில் அடைக்கவில்லை. ஒரே கையெழுத்தில் 1,78,000 அரசு ஊழியர்களை வேலைநீக்கம் செய்யவில்லை.

இதெல்லாம் கடந்தகால அதிமுக ஆட்சியில் நடந்தது. எங்கள் ஆட்சியில் இல்லை. இப்போதும் சொல்கிறேன். நாங்கள் அரசு ஊழியர்களுடைய போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். அதுமட்டுமல்ல, நம்முடைய எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடியவர், முதலமைச்சராக இருந்தபோது அரசு ஊழியர்கள் எந்தெந்த வகையில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எல்லாம் கொச்சைப்படுத்தி பேசியதை எல்லாம் இந்த நாடு மறந்துவிடவில்லை.

23 ஆண்டுகால பிரச்னையை நாங்கள் தீர்த்து வைத்திருக்கிறோம். தீர்த்து வைத்ததுடன் அரசு ஊழியர் சங்கங்களை சார்ந்த பொறுப்பாளர்கள் எல்லாம் கோட்டையில் இருக்கக்கூடிய முதலமைச்சர் அறைக்கு வந்து இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதலமைச்சர் அறைக்குள்ளேயே வந்து எனக்கு இனிப்பு ஊட்டியது, நான் அவர்களுக்கு இனிப்பு ஊட்டிய காட்சி எல்லாம் நீங்கள் தொலைக்காட்சியிலே பார்த்திருப்பீர்கள். பத்திரிகைகளிலும் பார்த்திருப்பீர்கள். அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

அந்த மகிழ்ச்சி உங்களுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் எதையும் செய்யவில்லை, எதையும் செய்யவில்லை என்று திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இன்னும் சில பிரச்னைகள் இருக்கின்றன. நான் முழுவதையும், நூற்றுக்கு நூறையும் நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்லவில்லை. இன்னும் ஒன்றிரண்டு சதவீதம் இருக்கிறது.

சத்துணவு அமைப்பாளர்கள், அதேபோன்று அங்கன்வாடி அமைப்பாளர்கள் இவர்களையெல்லாம்கூட அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பகுதிநேர ஆசிரியர்களும் ஒரு பக்கத்திலே போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டங்கள் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை.

அவர்களையெல்லாம் அவ்வப்போது அழைத்துப் பேசி, அவர்களுடைய கோரிக்கையை எந்த அளவிற்கு நிறைவேற்ற முடியும் என்பதை சிந்தித்து, நிச்சயம் சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன், அந்த கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதில் எந்த கவலையும் பட வேண்டாம். அடுத்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சிதான் என்பதை உறுதியுடன் சொல்கிறேன். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

* வாக்குறுதியை அதிமுக நிறைவேற்றவில்லை: அமைச்சர் எ.வ.வேலு சரமாரி குற்றச்சாட்டு
தங்கமணி (அதிமுக): இந்தியாவில் கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் தமிழ்நாடு போராட்ட களமாக மாறி வருகிறது. தேர்தல் நேரத்தில் திமுக தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை.

அமைச்சர் எ.வ.வேலு: தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அனைத்துக்கட்சிகளும் வழங்கி வருகின்றன. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் செய்துள்ளோம். சொல்லாததையும் செய்திருக்கிறோம். அதிமுக தேர்தல் அறிக்கை கொடுத்தீர்கள். அதை நீங்கள் செய்தீர்களா? 58 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று 2011ம் ஆண்டே அறிவித்தீர்கள். செய்தீர்களா? சென்னை, கோவை, மதுரைக்கு மோனோ ரயில் திட்டம் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

அப்போது, சட்டப்பேரவையில் உள்ள மேஜையே உடையும் அளவுக்கு அடித்தீர்கள். அது என்னாச்சு? அதிமுக உறுப்பினர் ஊராட்சி ஒன்றியத்தில் முதியோர் ஆதரவற்றோருக்கு காப்பகம், வீடு இல்ல்லாதவர்களுக்கு மூன்று சென்ட் இடம், ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு இலவச செல்போன், பொங்கல் பண்டிகைக்காக கோ-ஆப்டெக்ஸில் 500 மதிப்புள்ள கூப்பன், அம்பேத்கர் அறக்கட்டளை, அம்மா வங்கி அடையாள அட்டை,

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை, மாணவர்களுக்கு இலவச இணையவசதி, முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்த்தப்படும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும், வேலைக்கு செல்லும் மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50 சதவிகித மானியம், மாணவர்களின் கல்வி கடன் ரத்து என அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கிய எந்தவித வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றார்.

* அரசு ஊழியர்கள் போராடிக் கொண்டிருப்பதை மிகுந்த கவலையோடு, வருத்தத்தோடு, அக்கறையோடு உறுப்பினர் தங்கமணி குறிப்பிட்டிருக்கிறார். இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை?

* நாங்கள் எஸ்மா, டெஸ்மா கொண்டுவரவில்லை. இரவோடு இரவாக அவர்களைப்போய் கைது செய்யவில்லை. கொண்டுபோய் ஜெயிலில் அடைக்கவில்லை. ஒரே கையெழுத்தில் 1,78,000 அரசு ஊழியர்களை வேலைநீக்கம் செய்யவில்லை. இதெல்லாம் கடந்தகால அதிமுக ஆட்சியில் நடந்தது.

* 23 ஆண்டுகால பிரச்னையை நாங்கள் தீர்த்து வைத்திருக்கிறோம். தீர்த்து வைத்ததுடன் அரசு ஊழியர் சங்கங்களை சார்ந்த பொறுப்பாளர்கள் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதலமைச்சர் அறைக்குள்ளேயே வந்து எனக்கு இனிப்பு ஊட்டியது, நான் அவர்களுக்கு இனிப்பு ஊட்டிய காட்சி எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

 

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu Assembly ,
× RELATED வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த...