×

தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை வசதிகள் நிலை என்ன? – விரிவான அறிக்கை கோரியது ஐகோர்ட்

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா என விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர், பொன்னேரி தாலுகா, வெள்ளிவயல் கிராமத்தில் உள்ள ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, அந்த கிராமத்தைச் சேர்ந்த திருமலை என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வெள்ளிவயல் கிராமத்தில் உள்ள ஏரி அருகே குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “திடக்கழிவு மேலாண்மை சட்டப்படி, குப்பைகளை கையாள உரிய வசதிகளை அமைக்க வேண்டும். இந்த வசதிகளை ஏற்படுத்தாததால், திறந்த வெளிகளில் மலை போல குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இது சுற்றுச்சூழலுக்கும், மக்கள் ஆரோக்கியத்துக்கும் அபாயமானது,” என குறிப்பிட்டனர்.

மேலும், நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டனர். திடக்கழிவு மேலாண்மை வசதிகள் ஏற்படுத்தப்படாத மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்களின் பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், திருமலை தொடர்ந்த பொது நலன் வழக்கு விசாரணையை பிப்ரவரி 23 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags : Tamil Nadu ,Chennai ,Madras High Court ,Tamil Nadu government ,Vellivayal ,Ponneri taluka ,Tiruvallur… ,
× RELATED ஜம்மு – காஷ்மீரின் தோடா பகுதியில்...