×

புதுச்சேரியில் இருந்து நாமக்கல்லுக்கு 300 மதுபாட்டில்கள் கடத்தல்

விழுப்புரம், ஜன. 23: விழுப்புரம் அருகே செக்போஸ்டில் போலீசார் நடத்திய சோதனையில் புதுச்சேரியிலிருந்து நாமக்கலுக்கு கடத்திய 300 மதுபாட்டில்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக-புதுச்சேரி எல்லையான விழுப்புரம் மாவட்டம் வழியாக மதுபாட்டில், சாராயம் கடத்தி செல்வதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு சோதனை சாவடிகள் மற்றும் நடமாடும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் காரின் பின் பகுதியில் அட்டை பெட்டிகளில் 750 மில்லி அளவு கொண்ட 300 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம் நரியங்காடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(28), களத்தொலவு செல்வராஜ்(37) என்பது தெரியவந்தது. புதுச்சேரியிலிருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு அங்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்திச்சென்றது தெரியவந்தது. இது குறித்து விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கார், 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

Tags : Puducherry ,Namakkal ,Villupuram ,Villupuram district ,Tamil Nadu-Puducherry ,
× RELATED கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு