- ராஜா தேசிங்கு கோட்டை
- அஇஅதிமுக
- விழுப்புரம்
- பாஜக
- அன்புமணி பா.ம.க.
- தேசிய ஜனநாயக கூட்டணி
- விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜ, அன்புமணி பாமக தங்களுக்கு செல்வாக்கான தொகுதிகளை பெற தற்போது காய்நகர்த்தி அதற்கான வேலையில் இறங்கி உள்ளனர். குறிப்பாக வட மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் தொகுதிகளை கேட்டு கட்சி அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதனால் அதிமுகவில் சிட்டிங் தொகுதிகளை மட்டும் தக்கவைத்து மற்ற தொகுதிகளை கூட்டணிக்கு தாரைவார்க்க அந்த மாவட்ட திமுக மாஜி அமைச்சர் திட்டமிட்டு எடப்பாடி தகவல் அனுப்பி உள்ளார்.
அமைச்சர் மற்றும் விஐபி தொகுதியை கொண்ட ராஜா தேசிங்கு கோட்டையான செஞ்சிக்கு அதிமுக கூட்டணியில் பாஜ, அன்புமணி பாமக முட்டி மோதி வருவது அதிமுகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் ராஜா தேசிங்கு போன்ற மன்னர்கள் தங்கி வாழ்ந்த ஊர் செஞ்சி. அதிகளவில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் வசிக்கின்ற இத்தொகுதியில் மற்ற பிரிவினர்களான முதலியார், நயினார், யாதவர், மீனவர்கள் மட்டுமின்றி இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர் உட்பட பல்வேறு சமூகத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். செஞ்சி தொகுதி கடந்த 1962ல் இருந்து 13 சட்டமன்றத் தேர்தலை சந்தித்து உள்ளது. அதில் 8 முறை திமுகவும், 3 முறை காங்கிரசும், 1 முறை அதிமுகவும், 1 முறை பாமகவும் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுகவில் இருந்து விலகி பாஜவில் இணைந்துள்ள முன்னாள் கூட்டுறவு வங்கி சேர்மன் முரளி ரகுராமன் இந்த தொகுதியை போட்டியிட சீட் கேட்டு வருகிறார். இதற்காக மாநில தலைவர் நயினாரை அழைத்து வந்தும் அவ்வப்போது பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏவாக இருந்த அன்புமணி பாமகவை சேர்ந்த கணேஷ்குமாரும் சீட் கேட்டு அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
அதே சமயம் அதிமுக கூட்டணியில் ஒவ்வொரு முறையும் கூட்டணிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டு வருவதால், கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இதனால் இந்தமுறை அதிமுகவிற்குதான் செஞ்சியை ஒதுக்க வேண்டுமென இலை கட்சியினரும் தலைமையிடம் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதுபோன்ற பன்முனை நெருக்கடியால் செஞ்சி தொகுதி விவகாரத்தில் அதிமுக தலைமை விழிபிதுங்கி உள்ளது. இருப்பினும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீட்டின்போதுதான் இலை கட்சியினரின் விருப்பம் நிறைவேறுமா அல்லது கூட்டணி கட்சியினரின் நிர்பந்தத்திற்கு அதிமுக தலைமை அடி பணியுமா? என்பது தெரியும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
