வந்தவாசி, ஜன. 22: வந்தவாசி அருகே காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடி வெடித்து விவசாயி படுகாயம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அதியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்(57), விவசாயி கூலி தொழிலாளி. மருதாடு கிராமத்தைச் சேர்ந்த ராணி என்பவர் குத்தகையில் விவசாயம் செய்து வரும் நிலத்தில் கூலி வேலை செய்ய நேற்று குமார் வந்துள்ளார். அப்போது அங்குள்ள வரப்பில் மண்வெட்டியால் குமார் வெட்டி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடி மீது மண்வெட்டி பட்டு வெடித்தது. இதில் படுகாயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பாகரன் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடி வைத்தவர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
