திருவண்ணாமலை, ஜன.21: திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சேலம் பெண்கள் அணி முதலிடம் பிடித்தது. அவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் கோப்பை வழங்கி பாராட்டினார்.திருவண்ணாமலை மாநகராட்சி சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 41வது வாலிபால் விளையாட்டு போட்டிகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதில், 38 மாவட்டங்களை சேர்ந்த 19 வயதிற்கு உட்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளை சேர்ந்த அணிகளும், எஸ்.டி.ஏ.டி. ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
பெண்கள் பிரிவுக்கான வாலிபால் விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. இதில், சேலம் மாவட்ட அணி முதலிடத்தை பிடித்தது. ஈரோடு (எஸ்.டி.ஏ.டி) அணி 2வது இடத்தையும், சென்னை (எஸ்.டி.ஏ.டி) அணி 3வது இடத்தையும் பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மலைவாசன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை மனோன்மணி வரவேற்றார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் டி.சண்முகப்பிரியா வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அதைத்தொடர்ந்து, இன்று மற்றும் நாளை ஆண்கள் பிரிவுக்கான வாலிபால் போட்டி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் பிரகாஷ், தொழிலதிபர் சிவா, உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
