புதுடெல்லி: பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நியமனம் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பாஜகவின் தேசியத் தலைவராக இருந்த ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதின் நபின் (45) புதிய தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார். 5 முறை எம்எல்ஏவாக இருந்த இவர், கட்சியின் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் தலைவர் பதவியை அலங்கரிக்கும் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் ஜனநாயக முறைப்படி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் தெரிவித்தார். மேலும் டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி, புதிய தலைவரை ‘எனது பாஸ்’ என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
இந்நிலையில் நிதின் நபின் நியமனம் குறித்து காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நிதின் நபின் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை; மாறாக ஆர்எஸ்எஸ் அமைப்பால் மகுடம் சூட்டப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் கார்கே மற்றும் சசி தரூர் இடையே நடந்த உண்மையான உட்கட்சி தேர்தல் போல் பாஜகவில் நடக்கவில்லை. இந்த பாவம் அறியாத இளைஞருக்கு தற்போதைய கட்சித் தலைமையில் எவ்வளவு சுதந்திரம் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம், வயதை வைத்து தலைமையை தீர்மானிப்பதை விட, திறமை மற்றும் அனுபவமே முக்கியம்’ என்று அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
