ஐதராபாத்: தெலுங்கு நடிகை சமீரா ஷெரீப் சிறுவயதில் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடபில்லா, அபிஷேகம் போன்ற தெலுங்கு தொடர்களில் நடித்துப் பிரபலமான நடிகை சமீரா ஷெரீப், தனது மாமியாரும் மூத்த நடிகையுமான சனாவுடன் நடத்திய உரையாடல் ஒன்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் ரயில்வே குடியிருப்பில் வசித்தபோது தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எங்கள் அண்டை வீட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அடிக்கடி எங்களது வீட்டுக்கு வருவார். சிறுவயதில் கண்ணாமூச்சி விளையாடுவது போல என்னை தனியாக மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவார்.
அது பாசம் இல்லை, பாலியல் தொல்லை என்பதை அப்போது என்னால் உணர முடியவில்லை. அந்த நபர் என்னை முத்தமிட்டு என்னிடம் தவறாக நடந்துகொண்டார். பயம் காரணமாகவே அவரது செயலை எனது பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்தேன். எனது பெற்றோரிடம் கூறினால், அவர்கள் என்னையே திட்டுவார்கள் என்ற அச்சம் அப்போது இருந்தது. குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் குறித்து பெற்றோர்கள் கண்டிப்பாகக் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் பயமின்றி பெற்றோரிடம் பேசும் சூழலை உருவாக்க வேண்டும். அனுதாபத்திற்காக இதைச் சொல்லவில்லை. விழிப்புணர்வுக்காகவே இந்த உண்மையைப் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று அவர் கவலையுடன் கூறினார்.
